''கட்சியைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொண்டு வா, இப்போது வேண்டாம்" - அறிஞர் அண்ணா அவர்கள்





நான் முதன் முதலில் அறிஞர் அண்ணாவை 1946-ல் அவர் எழுதிய சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம் என்ற நாடகத்தில் நடித்த போது, டி.வி.நாராயணசாமி அவர்கள் மூலமாக அண்ணாவைக் கண்டேன்.

அப்போது நான் காங்கிரசிலே இருந்து விலகி ஒதுங்கியிருந்த நேரம்.

எந்தக் கட்சிலேயும் பணியாற்றாமல் ஒதுங்கியிருந்தேன். நெற்றியிலே விபூதி பூசி. கழுத்திலே உத்திராட்சக் கொட்டைகளை அணிந்துகொண்டு  கதராடைகளை உடுத்திக்கொண்டிருந்தேன்.

அப்படிப்பட்ட தோற்றத்தில் அன்று அறிஞர் அண்ணா கண்டதும் எந்த அன்பாடு என்னை அழைத்தாரோ அதே அன்பைத்தான் நான் இன்றும் அவரிடம் காண்கிறேன்.

யார் வந்தார்; எதற்காக வந்தார்; எந்தக் கட்சிக்காரர் வந்தார் என்பதைப் பாராமல், மனிதன் வருகிறான் - அதுவும் நடிகர்களிலே ஒருவன் வருகிறான் என்பதை அறிந்துகொண்டு என்னை அன்போடு வரவேற்றார். அதற்குப் பிறகு. 7, 8 ஆண்டுகள் கழித்து கழகக் கொள்கையை நன்றாகப் புரிந்து இத்தகைய திட்டம் இந்நாட்டு மக்களுக்கு உண்மையாகவே தேவையான ஒன்று தான் என்பதைத் தெரிந்த பின்புதான் கழகத்தில் சேர்ந்தேன்.

கல்லக்குடி போராட்டத்தின் போது நான் கட்சியில் இல்லை. ஆனாலும் நான் போராட்டத்தில் ஈடுபட முயன்றேன்.

கல்லக்குடி போராட்ட நேரத்தில் பல பட முதலாளிகள் என்னைப் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்தார்கள். நான் போராட்டத்தில் ஈடுபட இருக்கிறேன். அப்போது ஒப்பந்தங்களை ஏற்க முடியாதென மறுத்தேன். குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்து அப்போது அறிஞர் அண்ணா அவர்களும், மற்ற தலைவர்களும் போராட்டத்திலீடுபட்டுக் கைதாகியிருந்த நேரம். அப்போது நான் சிறைக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபடப் போகிறேன் என்ற கருத்தைக் கூறினேன். அதற்கு அறிஞர் அண்ணா அவர்கள், ''கட்சியைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொண்டு வா, இப்போது வேண்டாம்" என்று என்னைத் திருப்பி அனுப்பி விட்டார். நான் ஏன் இதைக் கூறுகிறேன் என்றால்.

அரசியல் கட்சிகள் பல யாராவது புகழ் பெற்றவர்கள் வர மாட்டார்களா என்று ஏங்கிக்கிடக்கன்றன. அந்தக் கட்சிகளுக்கிடையே அறிஞர் அண்ணாவைத் தலைவராக ஏற்றுள்ள கட்சி  நான் போராட வருகிறேன்" என்றபோது "எப்போது நீ கட்சியைப் புரிந்துகொண்டு வருகிறாயோ அப்போது வா, என் றார். எனவே, அறிஞர் அண்ணாவின் கடமை உணர்ச்சியை-அன்பு உணர்ச்சியை நாம் புரிந்து கொள்ளாவிட்டால் நாம் மனிதர்களாகமாட்டோம்.

நன்னிலம் வட்டத்திலே அறிஞர் அண்ணா என்னைப்பற்றிப் பேசியபோது மரத்திலே பூவாக காயாக இருந்தது இப்போது கனியாகி இருக்கிறது என்றார். அறிஞர் அண்ணா யாருக்காக அதைக் கூறியதாகக் கருதுகிறாரோ அது எனக்குத் தெரியாது. ஆனால், நான் அதை எனக்காகக் கூறியதாக ஏற்று நடக்கிறேன்.

பூவாக இருந்த நான் கனியாகும் வரை அறிஞர் அண்ணா காத்திருந்தார். ஆனால், தடிகொண்டு அடித்துப் பழுக்க வைத்த பழமல்ல, அப்படிப்பட்ட அரிய குணங்களைக் கொண்டவர் அறிஞர் அண்ணா.

தி.மு. கழகத்தில் இருப்பவர்கள் தானாகவே சம்பாதித்து வாழும் தகுதியும், பெருமையும் பெற வேண்டும் என்றார். எவன் எந்தத் துறையிலே இருக்கிறானோ, அவன் அந்தத் துறையிலே நன்றாக சம்பாதித்து வாழ வேண்டிய தகுதி பெற வேண்டும்'' என்றார்.

நான் கலைத்துறையில் எனது வருவாயை நானாகவே வளர்த்துக் கொள்ளும் அளவுக்கு மாற்றியமைத்திருக்கிறேன். அறிஞர் அண்ணா எனக்காகத்தான் நன்னிலம் வட்டத்து நிகழ்ச்சியில் அந்த அறிவுரையைக் கூறினாரோ என்று கருதி எனது கலைத்துறையை மாற்றியிருக்கிறேன் என்று அந்சதையாகக் கூறவில்லை.

அடக்கத்தோடும் அதே நேரத்தில் பெருமை யோடும் கூறிக்கொள்கிறேன்.

 


-   சிதம்பரத்தில் 29-9-1963 அன்று அறிஞர் அண்ணா அவர்களுக்கு நடைபெற்ற கார் பரிசளிப்பு விழாவில் புரட்சித் தலைவர், அறிஞர் அண்ணா அவர்களிடம் கார் சாவியை அளித்துப், பேச்சில் ஒரு பகுதி

முரசொலி -  5-10 1963.

 

 


Comments