போதும் என்ற மனம் - டாக்டர் எச்.வி. ஹண்டே

 



 

 

எப்போதும் லட்சக்கணக்கான மக்களுக்கு நடுவிலேயே இருந்தவர் புரட்சித் தலைவர். அவரைச் சுற்றி மற்றவர்கள் இருக்காத நேரமே கிடையாது. இருந் தாலும் டாக்டர் எம்.ஜி.ஆர். மனதில் ஒரு குறை இருந்ததாகவே நான் உணர்ந்தேன்.

 

தன்னைச் சுற்றியிருப்பவர்களில், தன்னை தனக்காகவே ஏற்றுக் கொள்பவர் தொகை மிகவும் குறைவோ என்ற எண்ணம் அவர் மனதில் எப்போதும் குடி கொண்டிருந்தது என்று எனக்குத் தோன்றியது.

அவர் செய்யும் உதவிகளுக்காகவும், அவரிடம் உதவி கேட்க வேண்டும் என்பதற்காகவும் அவரைச் சுற்றிக் கொண்டிருந்தவர்களை விட, அவரை அவருக்காகவே நேசித்தவர்களை அவர் மிகவும் விரும்பினார்.

 

ஒரு சமயம் திருச்சியில் ஒரு மாநாடு . நானும் புரட்சித் தலைவரோடு போக வேண்டிய நிலை ஏற்பட்டது.

 

''உங்க கார்ல எத்தனை பேர் இருப்பாங்க?'' என்று நான் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களைக் கேட்டேன்.

       "என்கூடக் கார்ல நீங்க வர முடியுமான்னு கேக்கறீங்க. வறீங்க.'' என்றார் அவர்.

"எப்பப் புறப்படணும்...'' என்று நான் கேட்கத் துவங்குவதற்குள், "போய் ஓய்வு எடுங்க. புறப்படற போது நான் போன் செய்கிறேன்'' என்றார்.

 

அவரோடு நான் காரில் பயணம் போவது அதுதான் முதல் முறை.

 

காலையிலேயே புறப்பட்டு விட்டதால் செங்கல்பட்டுக்கும், விழுப்புரத்துக் கும் இடையே ஒரு இடத்தில் காரை சற்று ஒதுக்குப்புறமாக நிறுத்தச் சொல்லி விட்டு நாங்கள் சிற்றுண்டி சாப்பிட்டோம்.

 

அப்போது பலர் அவரைப் பார்த்து விட்டதால் பெரிய கூட்டமே கூடி விட்டது.

 

பொது மக்களைப் பார்த்து, "உங்க எல்லாருக்கும் என்ன வேணும், சொல் லுங்க!'' என்று கேட்டார் புரட்சித் தலைவர்.

''மகராஜா நீங்க நல்லா இருக்கணும். அதுதான் எங்களுக்கு வேணும்'' என்றார்கள் மக்கள்.

 

நாங்கள் திருச்சிக்குப் போனோம்.

 

எப்போதும் அவர் என்ன சாப்பிடுவாரோ அதையே கூட இருப்பவர்களும் சாப்பிட வேண்டும் என்று அவர் வற்புறுத்துவதை அங்கேயும் மறுபடி பார்த்தேன். காரில் போகும்போது கொண்டு போகும் சிற்றுண்டியானாலும் சரி; வீட்டில் சாப்பிடும் உணவானாலும் சரி. தான் உண்பதை மற்றவர்களும் சாப்பிட வேண்டும் என்று அவர் நினைத்தார். வலியப் போய் வயிறு நிரம்ப பரிமாற வைப்பார் அவர்.

 

 

"ஏன் சாப்பாட்டுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கறீங்க?" என்று நான் கேட்டே விட்டேன்.

 

அவர் சொன்ன விளக்கம் இன்னும் என் காதில் ஒலிக்கிறது.

 

வேறு எந்த உதவியைச் செய்தாலும் உதவி பெற்றவனுக்கு முழு திருப்தி ஏற்படுவது இல்லை . ஆயிரம் ரூபாய் கேட்பார்கள். உடனே கொடுத்து விட் டால் திருப்தி ஏற்பட்டு விடாது. இரண்டாயிரம் கேட்டிருக்கலாம் போல இருக்கிறதே. கேட்காமல் போய் விட்டோமே என்று நினைப்பார்கள். சாப்பாட்டில் அப்படியில்லை. வயிறு நிறைய சாப்பிட்டால் நிச்சயமாகத் திருப்தி ஏற்பட்டு விடும். அதனால் தான் உணவு பரிமாறுவதை மிக விரும்பிச் செய்தார் அவர்.

 

இந்த விளக்கத்தைக் கேட்டதும் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. எவ்வளவு ஆழமாக யோசிக்கிறார் இவர் என்று வியப்பாகவும் இருந்தது.

 

-      வாழும் தமிழ் உலகம்

        An International Tamil Monthly

 

Comments