“என்னை வாழவைத்த சிங்கம்” - புரட்சி நடிகர் எம். ஜி. ராமச்சந்திரன்

 

 

 "எனக்கு சில ஆசைகள் இருக்கின்றன. நான் ஏழு வயதில் நாடகக் கம்பெனியில் நுழைந்ததிலிருந்து கலைத்துறையுடன் ஒன்றாகக் கலந்து செயற்பட்டு வருகிறவன். பேசாத ஊமைப்படக் காலத்திலேயே நான் கலையார்வத்துடன், படங்களில் நடிக்கும் ஆசையும் கொண்டேன். அந்த ஆசையின் விளைவாகத் தான் நான் அருமுயற்சியுடன் இத்துறையில் இடைவிடாது ஈடுபட்டு வருகிறேன்.

"நான் பல படங்களில் நடித்திருக்கிறேன். ஆயினும் நான் சொந்தக் கருத்துக்கு ஏற்றவாறு, நானே படமாக்கவேண்டும் என் விரும்பினேன். அந்த விருப்பத்தின் முதல் விளைவே 'நாடோடி மன்னன். அதில் நான் சமூகத்துக்குத் தேவையான பல கருத்துக்களையும், கொள்கைகளையும் சொல்லி, அரும் பாடுபட்டு அதை வெளியிட்டேன். அந்தப் படத்தில் சிங்கத்துடன் சண்டையிடும் காட்சியொன்றை எடுக்க வேண்டுமென்று கருதி, அதற்காக அழகான, பிடரி மயிருடன் கூடிய ஓர் ஆண்சிங்கத்தையும் ஒரு பெண் சிங்கத்தையும் விலைக்கு வாங்கி வளர்க்கத் தொடங்கினேன்

சிங்கத்துடன் சண்டையிடும் காட்சியை எடுக்கவேண்டுமென்ற எண்ணம் எனக்குள் உண்டானதற்குக் காரணம் உண்டு. ஆங்கிலப் படத்தில் சிங்கச் சண்டையைப் பார்த்து நான் மகிழ்ந்திருக்கிறேன், ஓர் ஆங்கிலப் படத்தில் மூன்று சிங்கங்களுடன் கதாநாயகன் சண்டையிடும் ஒரு காட்சி இடம் பெற்றிருந்தது. ஆனால் அந்தப் படத்தில் மூன்று சிங்கங்களும் சேர்ந்து, ஒரே நேரத்தில் கதாநாயகனைத் தாக்கியது இல்லை. மிருகங்கள் ஒரே நேரத்தில் பாய்வது தான் இயற்கையாகும். அப்படியிருந்தும் அந்தப் படத்தில் ஏன் அப்படிக் காட்டவில்லை என்று புரியவில்லை”.

"இதிலிருந்து எனக்குத் தோன்றிய ஆசை, தத்ரூபமாகச் சிங்கச் சண்டைக் காட்சியைப் படத்தில் எடுத்துச் சேர்க்க வேண்டும் என்பது. அதனால் சிங்கங்களை விலைக்கு வாங்கி வளர்த்தேன். 

ஆனால், 'நாடோடி மன்னன்' அந்தச் சிங்கச் சண்டைக் காட்சியை எடுக்க முடியாமல் நேர்ந்துவிட்டதற்குக் காரணம், ஆண் சிங்கம் திடீரென்று செத்துவிட்டதேயாகும். பெண் சிங்கத்தைக் காட்சிசாலைக்குக் கொடுத்து விட்டேன்,

''நாடோடி மன்னன்" படத்தில் சிங்கச் சண்டை இல்லாமல் வேறுவகையான உச்சக் கட்டக் காட்சியை அமைத்தேன். அது மகத்தான வெற்றியை அளித்துவிட்டது. அதனால் 'சிங்கம் செத்து என்னை வாழ வைத்தது' என்றே நான் சொல்ல விரும்புகிறேன். தற்போதோ சிங்கம் சாகாமல் உயிரோடு இருந்து என்னைக் காப்பாற்றியிருக்கிறது.

 ''அடிமைப் பெண்' படத்தில் சிங்கச் சண்டைக் காட்சி அமையவும் என்னுடைய நெடுநாளைய ஆசை ஈடேறவும் வழி செய்த இந்தச் சிங்கம் உண்மையிலேயே வாழவைத்த சிங்கம் தான்.

"அடிமைப் பெண்" படத்தில் சிங்கச் சண்டைக் காட்சியைப் படமாக்க நான் திட்டமிட்டிருப்பதைத் தெரிந்து கொண்டு, மிருகப் பாதுகாப்பு சங்கத்தார் எனக்கு ஒரு கடிதம் அனுப்பினார்கள். "சிங்கத்தைக் காட்சிச் சாலைக்கு உடனே அனுப்பி விடுங்கள்'' என்று அச்சங்கத் தலைவர் உத்தரவு போட்டிருந்தார்.

'நல்லவேளையாகச் சிங்கம் சாகவில்லை. பல நாட்கள் கஷ்டப்பட்டு, இக்காட்சியைப் படமாக்கினோம். சுருக்கமாகச் சொல்வதானால் நான் என்னையே பணயமாக வைத்துத் துணிவுடன் இக்காரியத்தில் இறங்கினேன் என்பது மிகவும் பொருந்தும்.



- (பத்திரிகையாளர்களிடம் எம்.ஜி.ஆர் வெளியிட்ட கருத்துகளின் ஒரு பகுதி)


Comments