அடுத்து வாட்போர்ப் பயிற்சி என்பது சினிமாவிலே ஒரு புதிய பகுதிக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் ஒரு பெயராகும்.
வாட்பயிற்சி என்றால் வாளை எப்படி எடுப்பது, எப்படிக் கால்களைப் பயன்படுத்தி முன்னால் போவது, பின்னால் வருவது; பக்கவாட்டில் நகருவது. இடது சாரி வலது சாரியாக வாளை எப்படிச் சுழற்றுவது, எப்படி வீசுவது, மனிதனுடைய கழுத்து, மார்பு, கை, இடுப்பு, கால் முதலியவைகளையும் கணுக்கால், முழங்கை , தோள், கண், காது, விரல் போன்றவைகளையும் எப்படி வெட்டுவது, குத்துவது என்பதையெல்லாம் சொல்லிக் கொடுப்பதற்குத்தான் அநேகமாகவாட் பயிற்சி என்று கூறவேண்டும்.
சினிமாவிலே சொல்லிக் கொடுப்பது அப்படியல்ல. ஒருவன் வருகிறான்; அவன் வாளை வீசுகிறான். அதை மற்றவன் தடுக்கிறான். இது அவ்வப்போது எடுக்கப்படும் காட்சிகளுக்கு ஏற்ப அமைக்கப்படுவதாகும்.
பலர் நினைப்பதுபோல் துவக்கத்திலிருந்து முறையாக வாட் போர்ப் பயிற்சி கற்றுக்கொடுக்கப்படுவது கிடையாது.
உடல் வலிவும், துணிவும் உள்ளவர்கள் சில நாட்கள் பழகியதும், நாலைந்து வெட்டுக்கள், இரண்டு மூன்று குத்துகள், மூன்று நான்கு வீச்சுக்கள் இப்படித் தெரிந்து கொண்டு படத்தில் சண்டை ஈட முடியும்...
உதாரணமாகச் சங்கீதத்தைப் பற்றிக் கூறலாம். படங்களில் பாடுகிறவர்களுக்கு இனிமையான குரலும் சிறு அனுபவமும் இருந்தால் அவருக்கு ஏற்ப, பாட்டை இசை அமைத்துப்பாடச் செய்து விடலாம். அவரும் நல்ல பாடகராகலாம், புகழும் பெறலாம். ஆனால் தனியாகச் சங்கீத மேடைகளில் நல்ல பக்கவாத்தியக்காரர்களுடன் அமர்ந்து பாடுவதென்பது சிரமம். சங்கீத முறைப்படி பாடுவது முடியாத காரியமும்கூட.
சங்கீத முறைப்படி பாடம் பயின்று சினிமாவில் பாடுகிறவர்களும் உண்டு. இதுபோல் தான் சண்டைக்காட்சிகளிலும், அவ்வப்போது கற்றுக்கொண்டு நடிப்பவர்களும் ஓரளவுக்குத் தொழிலைக் கற்றிருந்து படத்திற்கு வேண்டியவைகளையும் அறிந்து நடிப்பவர்களும் உண்டு.
இந்த "செட்-அப்” என்று சொல்லப்படும் அமைப்பைத் தயார் செய்பவர்கள் தான் சண்டைப் பயிற்சியாளர்கள் என அறிவிக்கப் படுகிறவர்கள். தென்னகத்தில் குறிப்பாகத் தமிழகத்தில் அப்படிப் பட்டவர்கள் சிலருண்டு. அவர்களில் திரு.ஆர்.என்.நம்பியாரும் ஒருவர்.
ஆர்.என்.நம்பியாரைப் பொறுத்த வரையில் அவருடைய வாட்போர்த் திறமையை ருசிமிக்க அவியல் என்று சொல்லலாம். ஆங்கில முறையும், தமிழ்முறையும் கலந்ததாகும் அது.
சில கலப்புகள் நன்றாக இருப்பதுபோல் இவருடைய கலப்புச் சண்டை அமைப்புகளும் மக்களுக்குப் பிடித்தமாகவே இருக்கின்றன.
நாடோடி மன்னனில் இவரால் அமைக்கப்பட்டவை ஒரு சில சண்டைக்காட்சிகளே. உணவு விடுதியில் நடக்கும் சண்டை, நாடோடி குச்சியால் சண்டையிடுவது, நாடோடியும் மன்னனும் சேர்ந்து மற்றவருடன் போரிடுவது, கயிற்றுப்பாலத்தின் மீது, கடலில் ஒரு பகுதி முதலிய சண்டைக் காட்சிகளாகும்.
அவருடைய அடக்கமும், காட்சிகளின் நிலைமையைப் புரிந்து கொண்டு செயலாற்றும் நுண்ணறிவும் பாராட்டுதற்குரியனவாகும். அவருக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்பை நிறைவேற்றி வெற்றி பெற்றதற்கறிகுறியாகச் சண்டைக் காட்சிகளை மக்கள் ரசிப்பதலிருந்தே உறுதி செய்யப்பட்டுகிறதே, போதாதா?
இத்தனையையும் சொல்லியாகி விட்டதே கதை இலாகாவைப் பற்றி ஒன்று சொல்லவில்லையே என்று எண்ணிவிட வேண்டும்.
கதை இலாகாவில் இருப்பவர்கள் மூவர். ஒருவர் திரு.ஆர் எம்.வீரப்பன் (இவர்தான் எம்.ஜி.யார் பிக்சர்ஸின் மானேஜிங் டைரக்டர்), மற்றவர் வித்துவான் வே. இலக்குமணன் (இவர் சிலம்புக் குகை போன்ற படங்களுக்குக் கதை வசனம் இயற்றுகிறவர்), இன் னொருவர் எஸ்.கே.டி.சாமி (எனது அந்தரங்கக் காரியதரிசியாகவும், எம்.ஜி.யார் பிக்சர்ஸின் பங்குதாராகவும் இருப்பவர்).
இம்மூவரில் திரு.எஸ்.கே.டி. சாமி உணர்ச்சி வயப்பட்டவர். சில சமயம் யாருக்கும் புரியாத பல கேள்விகளைக் கேட்டுத் திணறடித்து விடுவார். படம் முழுதும் எடுக்கப்பட்டு, போட்டுக் காண்பித்து, எதை நீக்குவது என்பதைப் பற்றிப் பேசும் போது எனக்கு வேடிக்கையும், விசித்திரமும், திகைப்பும் தோன்றும்படியான பல அனுபவங்கள் கிடைத்தன.
படமாக்கப்பட்டுள்ள நிகழ்ச்சிகளை மாற்றும்படி சொல்வதில் எஸ்.கே.டி.சாமி அவர்கள் பல மாற்றங்களைச் சொல்வார். சிறிது துணிவுக் குறைந்தவனாக நான் இருந்திருந்தால் குழப்பமடைந்திருப்பேன். ஆனால் அவர் சொல்லிய விஷயங்களால் மேலும் துணிவு அதிகமாயிற்று.
வித்துவான் வே. இலக்குமணன் அவர்கள் என்னுடைய உழைப்பையும், படும் கஷ்டத்தையும் கண்டு அனுதாபப்படுகிறவர்.
எடுக்கப்பட்டிருக்கும் காட்சிகளில் எதை நீக்குவது என்ற பிரச்சினை வந்தால், நீக்கப்பட வேண்டுமென்று கூறப்படும் காட்சியைப் படமாக்க நான்பட்ட சிரமத்தைப் பற்றிப் பேசி, அவ்வளவு கஷ்டப்பட்டு, பெரும் செலவு செய்து படமாக்கியதை வெட்டவேண்டுமா?' என்பார். ஆனால் வேறு பல நல்ல மாற்றங்களைச் சொல்வார்.
இன்னொருவரான திரூ. எம்.வீரப்பன் ஒரு வார்த்தை கூட அதிகமாகத் தானாகப் பேசாதவர்.
"காடு வெளைஞ்சென்ன மச்சான்” என்ற பாட்டு பாடத்திலிருப்பதற்கு முதற் காரணம் ஆர்.எம்.வீரப்பன் அவர்களே.
படக்கதையிலிருந்து சில காட்சிகளை அறவே நீக்கி விடவேண்டுமென்று ஒரே பிடிவாதமாகப் போராடியவர் வீரப்பன் அவர்களே. அடக்கம், ஆனால் தன் மனதில் தோன்றுவதை வெளியிடும் போது அச்சமே கொள்ளாதவர்......
இப்படிப்பட்ட இம்மூவரும் இரவு பகல் கதையைப் பற்றிச் சிந்தித்துத் தங்களுக்குள் வாதிட்டுச் செய்த நல்ல முடிவின் பலன்தான், கதை, அதிகமான கண்டத்திற்கு இலக்காகாமல் தப்பியது. கதை இலாகா என்ற பெயரில் நல்லதொரு பணியைச் செய்து, தங்கள் விருப்பப்படி கதையை வெற்றி பெறச்செய்த இம்மூவரின் நிலைமை மகிழ்ச்சிச் சிகரத்தின் உச்சியிலிருக்கிறவர்களாக்கப் பட்டிருப்பதுதான் என்றால், இரவு பகலாகச் சிந்தித்துச் சிந்தித்து உழன்று கொண்டிருந்த இந்த நண்பர்களுக்கு இன்னும் வேறென்ன வேண்டும்... என்று கேட்கத் தோன்றுகிறதல்லவா?
டைரக்டர் திரு.கே. சுப்பிரமணியம் அவர்கள் "நாடோடி மன்னன்" வெற்றி பெற வேண்டுமென ஆசைப்பட்டவர்களின் முதல் வரிசையிலே நிற்பவர்களில் முதன்மையானவர். அவருக்கு என் மீது நல்ல பற்று உண்டு. ஆரம்பத்தில் அவரை எனக்கு மேற்பார்வையாளராக இருக்குமாறு கேட்டுக்கொண்டேன். அவரும் சம்மதித்து ஒரு காட்சிக்கு வந்தார். பிறகு அவர் என்னிடம் “நீயே சரிவரச் செய்கிறாய், என்னை எதற்காகக் கஷ்டப்படுத்த வேண்டும். வெளியே உனக்காக என்னென்ன செய்ய வேண்டுமோ அவைகளைச் செய்கிறேன், "சொல்" என்று கூறிவிட்டார். அவருடைய சொற்படி நானே முழுப்பொறுப்பும் ஏற்றேன்.வேறொருவராக இருந்தால் இந்த வாய்ப்பை இழந்திருக்கவேமாட்டார்.
ஒன்றும் செய்யவில்லையென்றாலும் பெயரும், புகழும் கிடைப்பதை ஏன் விட்டு விடவேண்டுமென்று விரும்புவார்கள் - ஆனால் கே. சுப்பிரமணியம் அவர்கள் பெருந்தன்மையோடு விலகிக் கொண்டதோடு மட்டுமல்லாமல் வெளியே எனக்காகப்பட்ட கஷ்டம் எழுதுவதற்கு முடியாத அளவு போற்றுதற் குரியதாகும்.
நாடோடி மன்னனில், வெளிப்புறக்காட்சிகள், சிறப்பாக அமைவதற்குக் கேரளாவில் உள்ள ‘மூணாறு’ போன்ற இயற்கை வனப்பு மிக்க இடங்களைப் படமெடுக்க ஏற்பாடு செய்து உதவியவர் திரு.கே. சுப்பிரமணியம் அவர்கள் தான்.
படத்தைச் சீக்கிரம் வெளியிட்டுவிட வேண்டும் என்பது அவருடைய ஆசை. வேகமாக வருவார்.... "இன்னும் எத்தனை காட்சிகள் பாக்கி? இந்தத் தேதியில் வெளியிடுவோமா?'... என்பார்... பார்ப்போம் என்பேன்... நம்பி ஏமாறுவார் : பிறுகும் வந்து " என்னப்பா இன்னும் இரண்டு மூன்று காட்சிகளிருக்குமா?' என்பார் வெளியிடும் தேதியைக் கேட்பார் - பார்ப்போம் என்பேன்; மறுபடியும் ஏமாற்றம். ஆனால் அவர் சளைக்கமாட்டார். மீண்டும் கேட்பார் புத்தி சொல்லிய படி....... " இவ்வளவு ரூபாய்கள் செலவழிந்துவிட்டன; இனியும் தாமதித்தால் சரியல்ல...... இந்தத் தேதியில் வெளியிடலாமா?' என்று...
அநேகமாகப் பார்ப்போம் என்பேன்... இதற்குப் பிறகு ஒளியமைப்பாளர் ராமுவுக்காவது நான் சொல்லியிருப்பேனென்று அவரிடம் "இன்னும் எத்தனை காட்சிகள் பாக்கி?' என்று கேட்டார் பொறுமை இழந்து.....
பாவம், ராமு என்ன செய்வார் !
நான் சொல்லியிருந்தாலல்லவா?.....
தனக்குத் தெரியாதென்று சொல்லிவிட்டார் ராமு.
கடைசியாக ராமுவிடம் சொன்னார்: "யார் என்ன சொன்னாலும் சரி, ராமச்சந்திரன் என்ன நினைக்கிறானோ அதைத்தான் செய்வான்" என்று.
வண்ணப்படம் சரியான நேரத்தில் கிடைப்பதற்காக அவர் பம்பாய்க்குப் போய்வந்ததை எண்ணினால், பிறருக்காக எந்தவிதப் பலனையும் எதிர்பார்க்காமல் உழைக்கும் இவரைப்போன்ற நல்லவர்களையும் காணமுடிகிறதே (இந்த சுயநலமும், சூழ்ச்சி மனப் போக்கும், பொறமைக்குணமுமே அதிகம் படைத்த இந்தச் சிறு வட்டாரத்திற்குள்) என்று அதிசயப்படாமலிருக்க முடியாது.
நடோடி மன்னன் வெளிவருவதற்கு முன்பாகப் படத்தைப் பார்த்துப் புகழ்ந்து வெற்றி முரசு கொட்டிய ஒரே ஒரு நபர் திரு.கே. சுப்பிரமணியம் அவர்கள் தான். அவர் சொன்ன வார்த்தை - இலட்சக் கணக்கான மக்கள் இன்று சொல்லும் வெற்றி என்ற அந்த வார்த்தை திரு. கே. சுப்ரமணியம் அவர்களுக்கு உரியது என்கிறதல்லவா?......
சுவரிருந்தால்தான் சித்திரம் வரையலாம். என்ன தான் பணம் இருப்பினும், உழைப்பவர்கள் - திறமை மிக்கவர்கள் இருப்பினும் அதனைப் பயன்படுத்திக் கொள்ளும் வசதி வேண்டாமா? பட்மெடுப்பவர்களுக்கு ஸ்டுடியோ வசதி மிகமிக முக்கியமானது.
விஜயா - வாகினி ஸ்டுடியோக்களின் அதிபர் திரு. நாகிரெட்டி அவர்கள் "நாடோடி மன்னனுக்குத் தந்த உதவி பாராட்டுக்குரியதாகும். ஸ்டுடியோ அதிபர்களால் மட்டும்தான் ஒரு வகைப்படங்களை எடுக்க முடியும் என்ற எண்ணத்தை - அச்சத்தைப் போக்கி, துணிவுள்ள எவரும் எடுக்கமுடியும் என்ற நம்பிக்கையை "நாடோடி மன்னன்" தோற்றுவிப்பதற்குக் காரணம் திரு.நாகிரெட்டி அவர்கள் தான். விசேட பலன் எதையும் எதிர்பாராமல் - பெற்றுக் கொள்ளாமல் உதவி செய்து ஒத்துழைத்த திரு. நாகிரெட்டி அவர்களுக்கு "நாடோடி மன்னன்" தந்த வெற்றி மகத்தானது. "நாடோடி மன்னன்' பட அதிபர்களுக்கு மகிழ்ச்சியையும், துணிவையும் உருவாக்கியிருக்கிறது என்றால் அதற்குத் திரு.நாகிரெட்டி அவர்களின் அரிய ஒத்துழைப்பு காரணமாகும். அவருடைய ஸ்டுடியோவான வாகினியில் தயாரிக்கப்பட்ட நாடோடி மன்னனில் இருப்பதாக மக்களால் கூறப்படும் சிறப்புகட்கு காட்சி சோடனை முதல் விளக்கு அமைப்புகள் வரை முழுவதற்குமாகத் திரு. நாகிரெட்டி அவர்கள் வெற்றி பெற்றுவிட்டார். நாடோடி மன்னனில் உள்ள அம்சங்களைப் பாராட்டும் போது அவற்றுள் பெரும்பாலானவைகட்குத் தரப்படும் பாராட்டு முழுவதையும் திரு.நாகிரெட்டி அவர்கள் தட்டிக்கொண்டு போய்விடுகிறார்கள்.
படமெடுக்கும் சொந்த ஸ்டுடியோக்காரர்கள் வேறு படமெடுக்கும் உரிமையாளர்களுக்கு - தொழிலாளர்களுக்கு உதவி செய்யமாட்டார்கள் என்ற வாதத்தைத் தூளாக்கி வெற்றி வாகை சூட்டிக் கொண்டுவிட்டார்.
படத்தின் கடைசிப்பகுதியில் கட்டிடங்கள் தண்ணீரில் அமிழ்வது, கயிற்றுப்பாலம் அறுதல், ஆட்கள் மேலேயிருந்து நீர் வீழ்ச்சியில் விழுதல் போன்ற காட்சிகளைப் படமாக்க ஜெமினி அதிபர் திரு.வாசன் அவர்கள் தந்த காமிரா (ஒளிப்பதிவு இயந்திரம்) மிகவும் பயன்பட்டது.
அவர் இதை முதன் முதலாக வெளியே அனுப்பியதாகக் கூறப்பட்டது. அப்படியே இல்லாதிருப்பினும்கூட, குறிப்பிட்ட ஒரு முக்கியமான காட்சி படம் எடுக்கப்படுகிறது என அறிந்தும் அனுப்பி வைத்த அவருடைய நல்லெண்ணத்திற்கு நாடோடி மன்னனில் காண்பிக்கப்பட்ட காட்சி எடுத்துக்காட்டாகும். அவரது நல்லெணத்திற்குக் கிடைத்த ஒரு வெற்றி இது என்று யாரும் துணிந்து கூறமுடியும்.
வெளிப்புறக் காட்சிகளைப் படமாக்க, காமிரா கொடுத்தவர்கள் அருணா பிலிம்ஸார். இவர்களுடைய உதவியாளர்கள் கல்லிலும் முள்ளிலும் நீர்வீழ்ச்சியின் அருகிலும் உயர்ந்த மலை முகட்டிலும் அடித்தளத்திலும் இவ்வாறு படமெடுக்க உதவினர். "நாடோடி மன்னனில்" வெளிப்புறக்காட்சி பாராட்டப்படும் முறையிலே இருக்கிறதென்றால் அதிலே பெரும் பகுதிப்பாராட்டைத் தங்களுடைய தாக்கிக்கொள்ள உரிமை பெற்றிருக்கும் அருணா பிலிம்ஸாருக்கு இதைவிட வெற்றி வேறுவேண்டுமா?.
இனி, விமரிசனம் செய்த பத்திரிகையாளர்களுக்கு நன்றி கூற இந்த நேரத்தைப் பயன்படுத்திக் கொள்ளுகிறேன். ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு ஆசையும், கொள்கைப் பிடிப்பும், நம்பிக்கையும் இருக்கும். சில சமயம் ஒருவருடைய நம்பிக்கை இன்னொருவருடைய - நம்பிக்கையுடன் மோதுவதுமுண்டு. ஆனால் அதை மனதில் கொண்டு நல்லதைப் பாராட்டவோ, புகழவோ, வர வேற்கவோ கூடாது என்று எண்ணினால் பண்பாடு செத்துவிடும் - வாழாது - வளராது.
"நாடோடி மன்னன்'' விமரிசனத்தைப் பொறுத்தவரையில் பெரும்பாலான - ஒன்றிரண்டு "ஏடுகளைத் தவிர மற்ற எல்லாப் பத்திரிகைகளும், பத்திரிகையின் போக்கு எப்படி இருக்க வேண்டுமென்று விளக்கிக்கூறுவது போன்று குறைகளை எடுத்துக் காட்டி, குணத்தைப் போற்றிய செயலைப் பாராட்டித்தான் தீர வேண்டும்.
பத்திரிகை ஆசிரியர்களும், அவரைச் சார்ந்தவர்களும் குறைகளைத் கண்டிக்கும் தந்தையைப்போலவும், அன்பு காட்டி அரவணைக்கும் அன்னையைப்போலவும் இருக்க வேண்டும். பத்திரிகாசியர்களும், கலைஞர்களும் நல்லதை ஆக்குபவர்களாக இருக்கவேண்டுமே தவிர அழிப்பவர்களாக இருக்கக்கூடாது.
ஆனால் ஒன்றிரண்டு ஏடுகள் இந்த நியதிக்கு மாறாக நல்லதை அழிக்கும் பணியிலேயே ஈடுபட்டிருக்கும் இந்த நேரத்தில், எந்த அரசியல் கட்சியினராக இருந்தாலும், எந்தக் கொள்கையைப் பிரசாரம் செய்தாலும், கலை நல்லதற்காகப் பண்பு கெடாமல் ஒழுக்கத்திற்கும் மக்கள் வாழ்வுக்கும் பயன்படுத்தப்படுகிறதா என்று நடுநிலையில் நின்று ஆராய்ந்து விமரிசனம் செய்த ஆசிரியர்களின் பெருநோக்கு பத்திரிகை உலகிற்கே பத்திரிகை தர்மத்திற்கே மிகப் பெரிய வெற்றியை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டது என்று துணிந்து கூறமுடியும்.
நல்ல நியதியை மேலும் உறுதிப்படுத்தியதற்காக அந்த மரி யாதைக்குரிய ஆசிரியப் பெருமக்களை வாழ்த்துகிறேன்; வணங்குகிறேன்.
தொடரும்.....
Comments
Post a Comment