“யாருக்கு வெற்றி “ - புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் - பாகம் - 06







ஆண் நடிகர்களைப் பற்றிக் குறிப்பிடும்போது படத்தில் தோன்றும் வரிசைப்படியே துவங்குகிறேன்.

 திரு.பி.எஸ்.வீரப்பா அவர்கள் குருநாதராகவும், தீவின் தலைவராகவும் நடிக்கிறார்... யாருக்கும் தலைவணங்காத வராகவும், தன் அறிவு முதிர்ச்சியில் அசையா நம்பிக்கை கொண்டவராகவும், தன்னுடைய எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்ள எந்தச் சூழ்ச்சியையும் செய்யத் தயாராக இருப்பவராகவும், தன்னைத்தவிர மற்றெல்லோரையும் முட்டாளாகக் கருதுபவராகவும், கர்வம், சுயநலம், கொலைத்தன்மை முதலிய கொடுங்குணங்களுக்கிருப்பிடமாகவும் உள்ள அரசகுருவின் பாத்திரத்தை ஏற்று, உடை, ஒப்பனை முதலியவைகளில் வழக்கத்திற்கு நேர் எதிரான மாறுதலுடன் புதுமுறையில் தோன்றி, மக்களைத் திகைக்கும்படி செய்துவிட்டார் என்று சொல்வதைவிட வேறு பொருதமான வார்த்தை எனக்குத் தெரியவில்லை.

சாதாரணமாக அவரை எதிர்பார்ப்பார்கள் அமைச்சர், தளபதி, தம்பி, அண்ணன், அரசப்பிரதிநிதி மாதிரியான வேடங்களில்.

பல படங்களிலே பயங்கரமாக அவரைச் சிரிக்கச் சொல்வ துண்டு; அவரும் சிரிப்பதுண்டு. இந்தப்படத்தில் நான் அவரை அது போல் சிரிக்கவும் சொல்லவில்லை ; அவர் சிரிக்கவுமில்லை .

கர்வத்தின் சாயல் பூரணமாகப் படிந்த நடை, பெருமிதத்தில் வெளிவரும் பேச்சுக்கள், ஆத்திரம் வந்தாலும் கைப்பிரம்பைத் தன் தொடையிலே உருட்டியபடி அதை மறைக்கும் சாகஸம் இவை போன்ற பலதரப்பட்ட சிறந்த நடிப்புத்திறனால் குருநாதரின் வேடத்திற்கே ஒரு புதிய பொலிவை ஏற்படுத்தித் தந்திருக்கிறார். படம் முழுவதும் அவர் காண்பித்திருக்கும் அக்கறை வெளிப்படுகிறது.

 வில்லனாக நடிக்கும் இவர் தன்னுடைய கலைப்பிரயாணத்தில் புதிய தொரு பாதையில் வெற்றி நடை போடுகிறார் என்று சொல்லாமல் வேறென்ன சொல்வது?

திரு.எம்.ஜி. சக்கரபாணி அவர்கள் எனது மூத்த சகோதரர் என்பது எல்லோருக்கும் தெரியும். அநேகமாக இவர், பிறரைக் கெடுக்கும் பாகத்தையே தாங்கி நடித்திருக்கிறார். கார்மேகம் என்ற பாகத்திலோ திருந்தி நன்மையும் செய்பவராக மாறுகிறார். ஆகவே இவருக்கு இந்த வேடம் ஒரு புதுமை என்பதோடு, தன் தலையைத் தடவியபடி எதிரிகளின் தலையையும் தடவி விட முடிந்த இவருக்கு இதைவிட இப்போது பெரிய வெற்றி வேறெதுவும் இருக்க முடியாது.

திரு.எம்.என்.நம்பியார அவர்கள்  இதுவரையில் என்னுடன் நடித்த படங்களில் அவருக்குப் பொருத்தமாக அமைந்தது "நாடோடி மன்னனி"ல் தான் என்று எண்ணுகிறேன். 

அவருடைய பாத்திரமே அவருக்காகத் தோற்றுவிக்கப் பட்டதோ என ஐயுறும் அளவுக்கு அவ்வளவு இயற்கையாகப் பொருந்திவிட்டது. 

அவருடைய கட்டான உடலுக்கும், இளமைக்கும், முறுக்கான பேச்சுக்கும், துணிவான வாட்போரிடும் திறமைக்கும் வாய்ப்பளிக்கப் பிங்கலன் என்ற வேடம் உதவியிருக்கிறது.

ஒரு இடத்தில் அவர் பேசும் பேச்சே அதை விளக்கிறது. "வாட்ட சாட்டமான உடல்; வாளெடுத்துப்போர் புரியும் வலிமை: ஆரணங்குகளை மயக்குகின்ற அழகு" - இந்தப் பேச்சின் முழுக்கருத்துக்கும் எடுத்துக் காட்டாக இருக்கிறார் நம்பியார்.

அவருடைய ஒவ்வொரு அசைவிலும் இளமைத் துடிப்பையும், வேகத்தையும் காண்கிறோம். சண்டை ஏற்படும் நேரத்திலும் கோழைத்தனமில்லாமல் தன்

- போர்த்திறமையில் நம்பிக்கை கொண்ட வீரனாகவே காட்சியளிக்கிறார். பிங்கலனின் பாத்திரம் எப்படி இருக்க வேண்டுமெனக் கற்பனை செய்யப்பட்டதோ அதை உண்மை உருவமாக்கிக் காண்பித்து விட்டார் நம்பியார் என்பது ஒன்றே போதுமே அவருடைய வெற்றிக்கு அடையாளமாக.

திரு.டி.கே. பாலச்சந்திரன் ஆர்வமிக்கவர்; குழப்பமோ, கலக்கமோ, களங்கமோ இல்லாத வாலிபர்; திறமையும், அனுபவமும் அக்கறையும் நிறைய உள்ளவர்.

நான் வளர்த்த சிங்கங்கள் உயிரோடி இருந்திருந்தால் கதைப் போக்கே வேறுவிதமாக இருந்திருக்கும். இவர் தாங்கியிருக்கும் பாத்திரத்திற்கும் இன்னும் அதிக வாய்ப்பு இருந்திருக்கும். 

அவர் பேச்சிலே அந்தப் பாத்திரத்தினுடைய இலட்சியத் துடிப்பையும், அவர் நடையிலே வாலிப மிடுக்கையும், பார்வையிலே தன் எண்ணத்தை வெளியிடும் கலைநுட்பத்தையும் காட்டித் தான் வெறும் நடிகன் மட்டுமல்ல, இலட்சியப்பாதையிலே முன்னேறிக் கொண்டிருக்கும் நல்ல கலைஞன் என்பதைச் சொல்லாமல் சொல்லிருப்பதுவே அவருடைய வெற்றிக்கு எடுத்துக் காட்டாகும்.

வீரபாகு வேடத்தை நடித்த திரு.கே.ஆர்.இராம்சிங் நடிப்பிலும் பேச்சிலும் தனக்கெனத் தணிப்பாணியை ஏற்படுத்திக் கொண்டிருப்பவர். அவருடைய குரலைக் கேட்டாலே பலவீனர்கள் அதிர்ச்சி அடைவார்கள்.

நாடகமேடையிலே நன்கு நடித்துத் திரை உலகிலும் விளம்பரமடைந்த இவருடைய திறமைக்குத் தகுந்த வேடம் இன்னும் வழங்கப்படவில்லை. ஆயினும் வேலை குறைவாயிருந்தும் மக்கள், "வீரபாகு வேடம் போட்டவர்.... அப்பப்பா....... என்று பேசும்படி செய்துவிட்ட இவருக்கு இதுவும் ஒரு வெற்றியென்று தான் சொல்ல வேண்டும்.


அமைச்சராக நடித்த நந்தா ராம் பயில்வான் (ஆமாம் பூபதி நந்தா ராம் அவர்கள் தான்) அவருடைய திறமைக்குத் தகுந்த புகழை இன்னும் அடையவில்லை என்று தான் சொல்ல வேண்டும். 

ஆங்கிலப் பாணியில் நடிக்க வேண்டுமா, காட்டுமிராண்டியாக நடிக்க வேண்டுமா, நாகரிக  சூழ்ச்சிமிக்க மனிதனாக நடிக்க வேண்டுமா, எந்த மாதிரியான பாகத்தில் வேண்டுமானாலும் திரு. நந்தாராம் அவர்களால் நடிக்க முடியும். 

நாடோடி மன்னனில் அமைச்சராக நடிக்கும் இவர், "அமைச்சர் ஓரளவுக்கு வயது முதிர்ந்தவர், அனுபவப்பட்டவர், பொறுப்புமிக்கவர். 

என்பதையெல்லாம் வெளிப்படுத்தியிருக்கிறார் தனது நடிப்பால்.


நிமிர்ந்த நெஞ்சுடன் இவர் நடப்பதை நன்கு கவனித்தவர்கள் பாரதியார், "நிமிர்ந்து நட" என்று சொல்லியதற்கு இவர் இலக்கணமாக இருக்கிறரோ என்று எண்ணத் தோன்றும்.

நாடோடி மன்னனில் முக்கியத் திருப்பத்திற்குக் காரணமாக இருக்கும் அமைச்சருடைய வேடத்தைச் சரிவர நிறை வேற்றியதால் தானே அந்தக் காட்சிகள் நினைவிலிருக்கின்றன. ஆகவே அந்தப் பொறுப்பை ஒழுங்காக நிறைவேற்றிய இவருக்கு இதுவும் ஒரு வெற்றி தான் என்று சொல்வது பொருத்தம்தான்.

தளபதி ஒரு ஆத்திரக்காரர்; தன் மனத்தில் அடக்கி வைத்துக் கொள்ளும் அனுபவமில்லாதவர்; யாரையும் சந்தேகிப்பார்; நம்பி விடுவார். இத்தகைய குணத்தைப் பெற்ற தளபதி பாத்திரத்தை அதற்குப் பொருந்தும் விதத்தில் நடித்திருக்கிறார் திரு. டி.வி. சிவானந்தம். இவரும் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் பல காலம் ஒன்றாய் வாழ்ந்தவர்; மதுரையில் வசித்துப் பல ஆண்டுகள் தனிப்பட நாடகங்களில் நடித்து அனுபவம் பெற்றவர். இவர் சில ஆண்டுகட்கு முன் படங்களில் நடித்திருந்தாலும், நாடோடி மன்னனில் தன்னை மக்களின் நினைவில் இருக்கும்படி செய்து கொண்டது இவருக்குக் கிடைத்த வெற்றியென்று ஏன் சொல்லக் கூடாது?  

துணை நடிக நடிகையர் நாடோடி மன்னனில் நடித்தது போல் அக்கறையாகவும், பொறுப்போடும் வேறு படங்களில் நடித்திருப்பார்களா என்பது சந்தேகம்.

அவர்கள் ஒவ்வொருவரும் தங்களிடம் உள்ள நடிப்புத் திறமை, பேச்சுத்திறமை, அத்தனையையும் வெளிக்காட்டப் போட்டி போட்டனர் என்றுதான் சொல்லவேண்டும்.

காவல் வீரர் முதல் கேணியிலே தண்ணீர் இறைக்கும் பெண் வரை போட்டியிட்டு ஒருவரையொருவர் மிஞ்சுகின்றனர் என்பதை வெளியிடும்போதே யாரும் சொல்லாமல் வெற்றி இவர்களுக்கே என்று வெளிப்படுகிறதே.

கும்பன், நிகும்பன் - இவர்கள் இந்தப் படத்தின் கடைசிப் பகுதியில்கூட ஒரு திருப்பத்தை ஏற்படுத்திவிடுவார்களோ என்று அஞ்சும்படி செய்கிறார்கள்.

கும்பன் பாகமேற்ற திரு.என்.எஸ்.நடராசன் பல ஆண்டுகளாகச் சினிமா உலகத்தில் பணியாற்றி வருபவர்.

 இது வரை அவரை யாருமே சரிவரப் பயன்படுத்திக் கொண்டது கிடையாது. நாடோடி மன்னன் அவருடைய திறமைக்கு ஒரு எடுத்துக்காட்டு... இதற்கு முன் எங்கோ பார்த்திருக்கிறோமே என்று தோன்றுகிறது இவருடைய பாத்திரத்தைக் கண்டதும், எஜமானுக்கு நம்பிக்கையுள்ள ஊழியனாகவும், கொள்ளை கொலைக்கஞ்சாப் பாதகனாகவும், முரடனாகவும் உள்ள ஒருவனைப் பல கதைகளில் சந்தித்திருப்போம் படித்தபோது....

அத்தனை கதைகளில் உள்ள பாத்திரங்களையும் ஒன்றாக்கி உருக்கொடுத்தால் எப்படியிருப்பானோ அதுபோல் என்.எஸ்.நடராசன் அவர்கள் காட்சி அளிக்கிறார்.

 அதனால் தான் இவர் ஏற்றிருக்கும் பாத்திரத்தை (நடராசன் அவர்களையல்ல) எங்கோ சந்தித்திருக்கிறோம் என்ற எண்ணம் தோன்றுகிறது. 

மக்களுக்கு வெறுப்பளிக்கும் பாத்திரத்தை ஏற்று, மக்கள் அருவருப்படைந்தாலும் அதே நேரத்தில் " அந்த ஆள் சரியான ஆள்டா" என்று பேசும்படி செய்த நடராசன் அவர்களுக்கு அவர் வாழ்க்கையில் இது முதல் தரமாகக் கிடைத்த வெற்றியாகும்.

இன்னொருவன் தானே சிந்திக்கத் தெரியாதவன்; தனித்து இயங்காதவன். எஜமான் சொல்வதைச் செய்வான்; ஆனால் அதற்கும் துணை வேண்டுபவன். வலிவுண்டு; அறிவில்லை. திறமையுண்டு; சிந்திக்கத் தெரியாது. ஏன் செய்கிறோம் என்பதே அவனுக்குத் தெரியாது. இப்படிப்பட்டவன்தான் நிகும்பன். இந்தப் பாத்திரத்தைத் திரு.குண்டுமணி ஏற்று நடித்திருக்கிறார்.

திரு. குண்டுமணியும் பல ஆண்டுகளாகச் சினிமாத் தொழிலில் ஈடுபட்டிருப்பவர். சண்டைக் காட்சிகளில் ஒழுங்காகவும், திறமையாகவும் பணியாற்றுபவர். மரியாதையும் அன்புள்ளமும் கொண்டவர். இவருடைய குணத்திற்கு நேர்மாறான வேடம்; ஆனால் உருவத்திற்கு மிகமிகப் பொருத்தமான வேடம்! இதை இவரைத்தவிர வேறு யார் நடித்திருந்தாலும் இந்தப் பாத்திரம் தானும் தோற்று, தன்னை நம்பியர்களையும் தோல்விக்கு இழுத்துச் சென்றிருக்கும். 

இந்த வார்த்தையைப் பயன்படுத்துவதிலிருந்தே இவர் தோல்வியைத் தோல்வியடையச் செய்து வெற்றி பெற்றுவிட்டார் என்பது புரியுமே...…

சண்டைக்காட்சிகளிலே ஈடுபட்டவர்களைத் தனித் தனியாய்க் குறிப்பிட முடியவில்லை. ஆனால் சண்டைக்காட்சிகள் நன்றாக இருக்கின்றனவென்றால் அதற்கு இவர்கள் தான் காரணம். நன்றாக இருக்கிறது என்று தோல்வி அடைந்ததையா கூறுவார்கள்! ஆகவே இவர்களுக்கு இவர்களுடைய பணியில், உழைப்பில் வெற்றி கிடைத்து விட்டது என்று கூசாமல் கூறலாம்.

சகாயம் ! இந்தப் பெயரின் கருத்தே உதவி என்பது தான். உதவியில் பல வகையுண்டு. ஆனால் இந்தப் பெயரினால் கிடைத்திருக்கும் உதவி சாமான்யமானதல்ல.

கதையின் குறிப்பிடத்தக்க, பாத்திரமாக இருக்கும் "நாடோடி"க்கு உதவி செய்வதில் சில நேரங்களில் ஆபத்தையே ஏற்படுத்திக்கொடுப்பவர் சாகயம். ஆனால் அதனால் ஏற்படும் விளைவு நன்மையாகவே இருக்கும். தனது தேவை முதலில் - அதே நேரத்தில் பிறரைக் கண்டு அனுதாபம். எதைக்கண்டாலும் திகைப்பு ; ஆனால் எதனைப் பற்றியும் அலட்சியம், எதிலும் பயம்; ஆனால் எதிலும் விருப்பம்; காதலும் வேண்டும், அது கஷ்டமின்றியும் கிடைக்க வேண்டும். இப்படிக் குழப்பமான குணம் படைத்த பாத்திரம் தான் "சகாயம்" இதனை ஏற்று நடிப்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல.

 சந்திரபாபு அவர்களின் திறமைக்கு இதுபோன்ற எந்தப் பாத்திரமும் மிகச் சாதாரணம் என்ற வகையில் நிறைவேற்றியிருக்கிறார்.

நடிகர்கள், பாத்திரத்திற்கு ஏற்படுத்தியிருக்கும் செய்கைகளைப் புதிய விதமாகச் செய்ய வேண்டும் (நடிக்க வேண்டும்) என்று தான் டைரக்டரோ, கதையாசிரியரோ விரும்புவார்கள்.

ஆனால், சந்திரபாபு அவர்கள் நடிக்கும்போது மட்டும் புது மாதிரியாகச் செய்கிறேனென்று சந்திரபாபு அவர்கள் சொல்லாமலிருக்க வேண்டும் என்பதைத்தான் எல்லோரும் விரும்புவார்கள்.

அவ்வளவு ஆர்வத்தோடு நடிப்பவர் சந்திரபாபு அவர்கள் நடிப்பதில் (எத்தகையதாயிருந்தாலும்) தனக்கெனத் தனிச்சிறப்பு ஏற்படுத்திக் கொள்ளத் தயங்காதவர்.

 அதற்காகத் தனக்கு எந்த ஆபத்துவரினும் பொருட்படுத்தாதவர். இதனால்தான் இவரைப்பற்றி நாங்களெல்லோரும் பயந்து கொண்டேயிருப்போம்.

ஆனால் என்னோடு பழகிய வரையில் அவருக்குத் தன் விருப்பத்தைத் தடுப்பது பிடித்தமில்லாததாயிருப்பினும், மறுத்துக் கூறாமல் நடித்துக் கொடுத்தார் அவர்.

மேலேயிருந்து குதிப்பேன் என்பார்..…


எனக்கு நன்கு தெரியும், அவரால் சரிவரக் குதிக்க முடியும் என்று. ஆனால் சில சமயம் புதுவிதமாகக் குதிப்பதாகச் சொல்லி, திடீரென்று ஆபத்து நேரும் விதத்தில் குதித்துவிடுவார். மரக்கிளை ஒடிந்துவிழும் காட்சியில் எவ்வளவு சொல்லியும் கேட்க மறுத்தார். கடைசியில் அந்தக்காட்சியே வேண்டாமென்று சொல்லிவிடலாமா என்ற நிலைக்கு வந்த பிறகு, மெள்ள விழுவதாக ஒப்புக் கொண்டார். 

ஆயினும் எனக்குப் பயம்தான்...

இப்படி அவரைப் பொறுத்தவரையில் பொறுப்பைத் தட்டிக் கழித்துவிடுவாரோ என்ற அச்சத்திற்கு மாறாக, பொறுப்பை நல்ல முறையில் நிறைவேற்ற வேண்டுமென்ற கடமை உணர்ச்சியினால் அவருக்கு ஆபத்து ஏற்பட்டு விடக்கூடாதே என்று கலங்கியப்படியே இருக்க வேண்டும்.

ஒரு நாள் வெளிக்காட்சி எடுத்துக் கொண்டிருந்தேன். சந்திரபாபு அவர்களும் நடிக்கவேண்டிய கட்டம்.

குதிரைகள் போகும் காட்சியைப் படமாக்கும் போது ஒரு குதிரை சொன்னபடி கேட்காமல் தொல்லை கொடுத்தது. சிறிதுநேரம் அதை ஒட்டி ஒழுங்குக்குக் கொண்டு வந்து குறிப்பிட்ட நடிகரிடம் கொடுத்து ஒட்டச் செய்து படமெடுத்து முடித்தேன். அதற்குள் சந்திரபாபு அவர்கள் தயாராகிவிட்டதால், அவர் சம்பந்தப்பட்ட ஷாட்டுக்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்தேன். பாபுவும் வந்தார்; ஏற்பாட்டைக் கண்டார். பத்து நிமிடங்களாவது ஆகும் என்றறிந்தார்; முரட்டுத்தனம் செய்து அடங்கியிருந்த குதிரை மீது ஏறப்போனர். நான் தடுத்தேன், அந்தக் குதிரை சரியல்ல என்று. சிறிதுநேரம் இங்கேயே சுற்றுகிறேன் என்றார். நான் குதிரைக்காரனிடம் எச்சரித்து, குதிரையுடனேயே லாகனைப் பிடித்த படி போகச் சொல்லிவிட்டு வந்தேன். ஐந்து நிமிடங்கள் கூட ஆகியிருக்காது. சிலர் ஓடி வந்து, "பாபு அடிபட்டுக் கீழே விழுந்து விட்டார். எம்.ஜி.ஆரிடம் சொல்லுங்கள் என்று சொல்லி மயக்கமடைந்துவிட்டார்" என்றனர். என்னால் எதுவும் கற்பனை செய்யவே முடியவில்லை ..... 

எப்படியோ பழைய சந்திரபாபு அவர்களாகவே இருக்கிறார் நலனோடு. 

அவரிடம் ஒருநாள் என் மனம்விட்டுச் சொன்னேன். இந்த வார்த்தை அவருக்கு மட்டுமல்ல; தென்னகக் கலைஞர்களுக்கு, குறிப்பாகத் தமிழ்க் கலைஞர்களுக்கு மிகமிகத் தேவையான விளக்கம் என்று கருதுவதால் அதை இங்குக் குறிப்பிடுவது சரியென்று கருதுகிறேன் : 

"சந்திரபாபுவின் திறமையை மக்கள் போற்றுகிறார்கள், புகழுகிறார்கள், என்றால், அந்தச் சந்திரபாபு தன்னிடமிருக்கும் கலைத் திறனை எத்தனை தொல்லைகளுக்கிடையில், எத்தனை எதிர்பார்ப்புகளுக்கிடையில் தெரிந்து கொண்டிருப்பார்.. அதற்காகப் பாடுபட்ட நாட்கள், மாதங்கள், வருடங்கள் எத்தனை எத்தனையோ! 

அவைகளை எல்லாம் - ஒரே நாளில் நினைத்ததும் பெற முடியாத அந்த மகத்தான கலைத் திறமையையெல்லாம் - ஒரே வினாடியில் இழந்துவிடும் நிலைக்கு மக்களைக் கொண்டு வருவது மக்களுக்குச் செய்யும் மகத்தான துரோகமாகும்" என்றேன்.

"மக்களுக்கு மகிழ்ச்சியை மட்டும் தான் கொடுக்கிறோம்; அறிவைக்கூட அல்ல" என்று வாதிப்பவர்கள் கூட இந்த இழப்பை விரும்ப மாட்டார்கள்....

"கலைஞர்கள் இல்லையே என்று ஏங்கும் மக்களுக்கு இருக்கும் கலைஞர்களையும் இல்லாமற் செய்வது சரியல்ல" என்றேன். இதை அவர் நன்குணர்ந்தார் என்பதற்கு அவர்விட்ட கண்ணீரே சாட்சியாக இருந்தது.

"எனக்கு நீ என்ன உபதேசம் செய்வது?' என்று அவரால் கேட்க முடியும் - கேட்கக்கூடியவரும் கூட. ஆனால் என்னிடம் கேட்கவில்லை... இதில் மட்டும் என்று எண்ணிவிடாதீர்கள்; தொழிலிலும் கூட....

உதாரணத்திற்கு அவர் சொன்ன சொல்லையே இங்கு உபயோகப்படுத்துகிறேன்.

"இதுவரையில் நீங்கள் சொன்னபடியே நடித்து வந்தேன். படமோ முடியப்போகிறது. இன்று ஒரு நாளாவது என் இஷ்டப்படி செய்ய விடுங்களேன்....... என்றார். 

இப்படி ஒற்றுமை உள்ளத்துடன் பணியாற்றி அவர் நாடோடி மன்னன் படத்தில் வேறு எவரும் செய்ய முடியாத - செய்ய விரும்பாதவைகளையெல்லாம் செய்து இருக்கிறார்!

கோழிக்குஞ்சு வாய்க்குள்ளிருந்து வரவேண்டும் - அதை வாயில் வைத்து அடைத்துக்கொண்டு, காட்சியில்வாயைத் திறந்து குஞ்சு வெளிவரச்செய்ய வேண்டும். குஞ்சு தன் கூரிய நகங்களால் தொண்டையைப் பிறாண்டிவிடுவது எளிதில் நடக்கக்கூடி காரியம். இதை அறிந்தும் அதைப் பற்றிக் கொஞ்சங்கூடக் கலைப்படாமல் அந்த காட்சியிலே நடித்தார். 

சரியாக அமைந்திராவிட்டால் என்ன செய்வதென்று மீண்டும் ஒருமுறை எடுக்கும்படி வற்புறுத்தி எடுக்கச் சொன்னார். நான் சரியாகவே இருக்கிறது, போதும் என்று சொன்னே; மேலும் எந்த ஆபத்தும் ஏற்பட்டு விடக்கூடாதே என்ற எண்ணத்தால்.

இவ்வளவு ஆர்வமும், அக்கறையும் எடுத்துக் கொள்ளுகிறவர்கள் சிலர் தானிருக்கிறார்கள்.

புகழ் பெறுவதற்காக விளம்பரம் அடையும் வரை அக்கறை காட்டுவது என்பது இயற்கை. புகழ்பெற்ற பின்னும், நல்ல விளம்பரம் கிடைத்த பின்னும் இவ்வாறு தொழிலில் அக்கறை காண்பிப்பது மிகக் குறைவே.....

ஆகவேதான் திரு. பாபு அவர்களைப் பற்றி இத்தனை எழுத வேண்டி வருகிறது.


கலையை ரசிக்கும் தன்மையும் அதிகம் பெற்றிருப்பவர் திரு.பாபு யாராயிருந்தாலும் சரி, அவரிடம் கலைத்திறமையைக் கண்டு விட்டால் பாபுவால் பேசாமலிருக்க முடியாது. அந்தக் கலைஞரைப் பாராட்டிப் புகழந்து மகிழ்ச்சியடைவதிலே அவருக்கிணை அவரே தான். அவருடைய முழுத்திறமையையும் கலை உலகம் இன்னும் சரிவரப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. ஆனாலும் இயற்கைக்குப் பொருத்தமற்ற, ஆனால் மக்களை மூடநம்பிக்கையுள்ளவர்களாக ஆக்கிவிடாத நகைச்சுவைக்காக மட்டுமே எடுக்கப்பட்ட முட்டைகளைத் தின்று, குஞ்சு வெளிவரும் காட்சியிலிருந்து சாப்பாட்டிற்கு மனுஷனுக்குக் கொள்ளு கூட இல்லே... குதிரைக்கு முட்டை கொடுக்கறீர்களே என்று வேடிக்கையாக, அனால் பெரிய தலைவர்கள் முதல் உலக நடப்பு ஒன்றுமே அறியாத பாமர மக்கள் வரை சிந்திக்கச் செய்யும் அவருடைய இயற்கை நடிப்பு அவருடைய நுண்ணிய கலைத்திறமையை எடுத்தக் காட்டு வதாகும்.... நாடோடி மன்னன் - நகைச்சுவைப் பகுதியிலே அவர் கையாண்டிருக்கும் முறை அவருக்கெனத் தனியாக அவர் உருவாக்கியிருக்கும் அமைப்புக்குப் பெரியதொரு வெற்றியென்று யாரும் எளிதில் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றாகும்.

                                                                                                                                        தொடரும்..... 

Comments