"நாடோடி மன்னன்" படத்தின்
வெற்றியை ஒட்டி ஒரு மலரைக் கொணரவேண்டுமென்றும், அதில்
நானும் என் மனத்தின் அடித்தளத்தில் வைத்துப் பாதுகாக்கும் உண்மைகளில் சிலவற்றை
எழுதவேண்டு மென்றும் கூறப்பட்ட நேரத்தில், எழுதிவிட்டால்
போகிறது என்று தான் எண்ணினேன் அலட்சியமாக.
ஆனால்
எழுத வேண்டுமென்று முடிவு செய்து பேனாவையும் கையில் எடுத்த பிறகுதான் நான்
ஏற்றுக்கொண்ட (எழுதும்) பொறுப்பு
எனக்குத் தொல்லையைத்தான் தரும், வெற்றியைத்தராது
என்று அறிந்தேன். ஏனெனில் எதை எழுதலாம், எதை
மறைத்துவிடலாம், யார்யார் சம்பந்தப்பட்டதை
வெளியிடலாம், நீக்கிவிடலாம், என்ற
கேள்விகளுக்கு விடைகாண முடியாமல் குழப்பமடைந்த போது தான் மேலே சொன்ன உண்மை
புரிந்தது. ஆயினும் பொறுப்பேற்ற பின் எப்படிப்
பின்னிடுவது.....
யாருக்கும்
மனச் சோர்வோ கோபமோ வருத்தமோ வெறுப்போ தோன்றாதபடி எழுதுவது என்று முடிவுக்கு வந்து
எழுத ஆரம்பித்தேன்.
தலைப்பு
ஏதாவதொன்று கொடுத்தாக வேண்டுமே?
பொங்கியெழும்
அலைகள் போலப் பல நினைவுகள் ஒன்றோடொன்று தொடர்ந்து பின்னியவாறு எழுந்தன.
ஆம்!.... படமெடுத்துக் கொண்டிருந்த காலத்தில் பலரால்
தொல்லை ஏற்பட்ட போது அவர்களிடம், "படம்
முடியட்டும், உங்களைப்பற்றியெல்லாம் நான்
படமெடுத்த கதை என்ற தலைப்பில் எழுதுகிறேன்"
என்று
வேடிக்கையாகச் சொன்னேன்.
அது
நினைவிற்கு வந்தது. ஆகவே “நான் படமெடுத்த கதை" என்ற தலைப்பிலேயே எழுதிவிடலாமா என்று யோசித்தேன். அது
சரியாகப்படவில்லை .
வெற்றி
மலருக்கு எழுதச் சொன்னால், "நடிகன்
குரலில் வெளி வரவேண்டிய எனது கதையை (கதையென்றதும்
கற்பனை என்று எண்ணிவிடாதீர்கள்!) இதில்
வெளியிடுவது சரியல்ல என்று தோன்றிற்று.
வேறு
தலைப்பு வேண்டுமே?
பலமான
சிந்தனைப் போராட்டத்திற்குப் பின் கடைசியாக என் மனத்திற்குத் திருப்தி அளித்த ஒரு
தலைப்பு கிடைத்தது...
"யாருக்கு வெற்றி” என்பதுதான்
அது.
“நாடோடி
மன்னனுக்கு வெற்றி" என்கிறார்கள்.
"நாடோடி மன்னன் படத்திற்கு வெற்றி"
"கதை அமைப்பிற்கு வெற்றி"
“வசனகர்த்தாவுக்கு
வெற்றி"
"பாடலாசிரியர்களுக்கு வெற்றி"
"இசை அமைப்பாளர்களுக்கு வெற்றி"
ஒளிப்பதிவாளர்களுக்கு
-
ஒலிப்பதிவாளர்களுக்கு
-
ஒப்பனையாளர்களுக்கு
-
உடை
அமைப்பாளர்களுக்கு
வெட்டி
ஒட்டி இணைப்பவர்களுக்கு (எடிட்டிங்)
மற்ற
தொழிலாளர்களுக்கு
நடிக
நடிகைகளுக்கு...
இயக்குநர்க்கு...
அடிப்படைக்
கொள்கைக்கு...
இப்படிப்
பலரும் சொல்லுகிறார்கள், எழுதுகிறார்கள்.
இவைகளைப்
பற்றி நான் என்ன சொல்லுவது என்று சிந்தித்த போதுதான் "யாருக்கு வெற்றி?" என்று தலைப்பில் எழுதுவது மிகவும் சரியானது என்ற
முடிவிற்கு வந்தேன்.
சுவரிருந்தால்தானே
சித்திரம் வரைய முடியும்?.....
ஒரு
படம் நன்றாக இருக்க வேண்டுமாயின் அதனுடைய கதை நன்கு அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.
நான்
எப்போதுமே கதையில் அதிக கவனம் செலுத்துவது வழக்கம். அந்த
வகையில் "நாடோடி மன்னன்" கதை அமைப்பிலும் நான் அதிக கவனம் வைத்தேன்.
"நாடோடி மன்னன்” கதையிலே
குறையே கிடையாது என்று நான் வாதிக்க தயாராயில்லை. அந்த
அளவுக்கு உண்மையை மறைக்கும் ஆணவக் குருடனாக நான் ஆகிவிடவில்லை .
அதிக
அளவில் குறைகள் அற்ற கதை அமைப்புக் கொண்டது "நாடோடி
மன்னன்" என்று மட்டும் என்னால்
துணிந்து கூற முடியும்.
எத்தனையோ
பெரிய அறிவாளர்கள் எழுதும் கருத்துக்கே குற்றம் காணும் திறம் படைத்தவர்கள் உள்ள
இந்நாட்டில், "நாடோடி மன்னன்" கதையில் குற்றம் காணுகிறவர்கள் இருக்க முடியாது
இருக்கக் கூடாது என எண்ணுகிறவன் இருந்தானானால் அவன் பரிதாபத்திற்குரியவன் என்பதை
யார் மறுக்க முடியும்? ஆனால்
மீண்டும் சொல்லுவேன். "நாடோடி
மன்னன்'' கதையில் குறைகள் அதிகமிருக்காது. அதுவும்
மக்களைக் கீழ்த்தரச் செயலுக்கு இழுத்துச் செல்லும் எந்தக் கேடான கொள்கையும் அதிலே
இல்லை என்று துணிந்து கூறுவேன்.
"சிலர் சொன்னார்கள் எழுதினார்கள்: "நாடோடி மன்னன்" கதை" ஜெண்டாவின்
கைதி" என்ற படத்தின் மறு பதிப்பு
என்று....
நாங்களே
முதன் முதலாக வெளியிட்ட விளம்பரத்தில் "ஜெண்டாவின்
கைதி" என்ற ஆங்கிலக் கதையின்
தழுவல் என்று அறிவித்தோம். ஆனால், படமாக்கிய
சமயம் அதன் அடிப்படையே மாற்றப்பட்டு விட்டது என்பதைக் கவனிக்காமல் சிலர் இந்தக்
கதையில் மாற்றமெதுவுமே இல்லை என்று எழுதினார்கள்; பேசினார்கள். "அந்த அன்பர்களுக்கு ஒரே ஒரு விளக்கத்தின் மூலம், எவ்வளவு
பெரிய அளவில் நம் நாட்டுப் பண்புக்கு ஏற்றவாறு அந்தக் கதை மாற்றி
அமைக்கப்பட்டிருக்கிறது என்பதை எடுத்துக் காட்ட விரும்புகிறேன்.
ஜெண்டாவின்
கைதி என்ற கதையில் மன்னனுடைய மனைவி மன்னனைப் போன்று நடிப்பவனிடமும் நெருங்கிப்
பழகுகிறாள்.
போலி
மன்னன் கடைசியில் திரும்பிப் போகும் போது அவளிடம் விடை பெறுகிறான். அவள்
அவனை யாரென்றறிந்த பின்னும் இணைந்து பழகி,
"நான்
உன்னை விரும்புகிறேன்; ஆனால்
நான் அரசி" என்றவாறெல்லாம் எண்ணத்தைச்
சொல்லுவது போல் அமைக்கப் பட்டிருக்கிறது ஆங்கிலக் கதையில்.
நாடோடி
மன்னனில் நாடோடியைத் தன் கணவனாக எண்ணி முதன் முதலில் மலர் தூவுகிறார் இராணி. "நாடோடியோ, தான்
இன்னெருவனுடைய மனைவியிடமிருந்து அவ்விதத் தொடர்பைப் பெறுவது தகாது... அவள் இடும் மலர் கூடத் தன்மேல்படக் கூடாது என்று
எண்ணி விலகிப் போகிறான் ..... பிறகு, அவளோ, அவனை
அன்னியன் என்று, ஆனால் நல்லவன் என்றறிந்ததும் "அண்ணா"
என்று
முறை கொண்டாடுகிறாள். அடிப்படைப்
பண்பாட்டிலேயே ஜெண்டாவின்கைதிக்கும் நாடோடி மன்னனுக்கும் பெரிய மாறுபாடு
இருக்கிறது.
மேலும்
"ஜெண்டாவின் கைதி'யில்
போலி மன்னன் உண்மையான மன்னனின் உறவினன். இங்கோ
எந்த உறவுமில்லாதவர்கள் மட்டுமல்ல; நேர்
எதிரான எண்ணம் கொண்டவர்கள்.,
ஒருவன்
"மன்னன்' - இன்னொருவன் “நாடோடி"; "மன்னன்" என்ற பதவியையே ஒழிக்க உழைப்பவன். "ஜெண்டாவின் கைதி'' கதையில்
அரசை ஆட்டிப் படைக்கும் குருநாதர் கிடையாது. தீவு
என்பதோ தீவின் தலைவன் என்பவனோ கிடையாது. கடைசியாக
ஆங்கிலக் கதையின் அடிப்படையையே மாற்றி “நாடோடி
மன்னன்' முழுக்க முழுக்கச் சில கொள்கைகளை
இலட்சியமாகக் கொண்டு அமைக்கப்பட்டிருக்கிறது.
இப்படிப்பட்ட
ஒரு கதையை நான் ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்? நம்
நாட்டில் சீர்திருத்தம், கற்பனைத்
திறன் இவைகளெல்லாம் உள்ளவர்களில்லையா ? அவர்களைக்
கொண்டு புதிய கதையை எழுதச் செய்து படம் எடுக்கக்கூடாதா?
இப்படிப்பட்ட
கேள்வி நியாயமானதுதான்.
இந்தக்
கதையை நான்தேர்ந்தெடுத்ததற்கு ஒரு முக்கியக் காரணம் உண்டு.
1937-38ம் ஆண்டுகளில் நான் கல்கத்தாவில் "மாயா மச்சீந்திரா" படத்தில் நடித்துக் கொண்டிருந்த காலம்.
ஒருநாள்
நான் சில நண்பர்களுடன் ஆங்கிலப் படம் ஒன்றைப்பார்க்கப் போனேன்."If I were king” “இப் ஐ வெர் கிங்" என்ற படம் அது. "ரோனால்ட் கால்மன்'' என்ற
பிரபல நடிகர் நடித்த படம் அது .... அதில்
ஒரு காட்சியில் ‘நான் மன்னனானால்' என்று
பேசுகிறார். என்னென்ன பேசினார் என்று எனக்குத்
தெரியாது. ஆனால் அந்தக் கருத்து என் மனதில்
அப்போதே பதிந்தது.
அடிக்கடி
சொல்லிக் கொண்டிருப்பேன்? "நான் மன்னனானால்"?..... என்று.
இப்போதைய
நடோடி மன்னனின் கருப்பொருள் அப்போதே தொன்றிவிட்டது.
அந்தக்
காலத்திலேயே ஏழ்மையைப் பற்றியும் மக்களின் நிலையைப் பற்றியும் சிந்தித்தவன் நான். "சிந்தித்தவன்" என்பதை விட"அனுபவித்துக் கொண்டிருந்தவன்' என்பதே
பொருந்தும்.
நாட்டிலே
இது போன்ற தொல்லைகள் ஏனிருக்க வேண்டும் என்று அடிக்கடி எண்ணுவேன். அப்போது
எனக்குக் கிடைக்கும் பதில்கள் கூறியதெல்லாம்,
"அன்னிய
ஆட்சி இங்கு இருப்பதனால்தான்' என்பதே... ஆனால் அந்த எண்ணம் இன்று வரையிலும் நீங்காத
உண்மையாகிவிடும் என்று நான் அப்போது எதிர்பார்க்கவே இல்லை.
ஆகவே
தான்,“நாட்டில்
அன்னிய ஆட்சி அகற்றப்பட்டாலும்,நல்லாட்சி
நிறுவப்பட்டால்தான் மக்கள் நல்வாழ்வடைவர்.
என்பதை
எடுத்துக் காட்ட "நாடோடி" யின் பாத்திரத்தை அமைத்தேன். ஆனால்
அதே நேரத்தில் மன்னனைப்பற்றியும் சிந்தித்துப் பார்த்தேன். இங்கு
மக்களை ஆளும் பொறுப்பிலே இருப்பவர்களும் நமது இனத்தைச் சேர்ந்தவர்கள் தான்; அவர்களும்
நம்மோடிருப்பவர்கள் தான். ஆனால்
அவர்களுடைய ஆற்றலும் அறிவும் திறனும் திண்மையும் அன்னியர்களால் அடக்கி
ஆளப்படுகின்றன. ஆக இவர்களும் நம்மோடிணைந்தால்...? இப்படி ஒரு கற்பனை செய்தேன். அதுதான்
மன்னனின் பாத்திரம்... மன்னன் உண்மையை உணருகிறான்; தானும்
மக்களுக்காக நாடோடியோடு சேர்ந்து பணியாற்ற முயலுகிறான்.
ஆனால்
அன்னிய பிடிப்பு அவ்வளவு இலேசாகவிடாது என்பதற்கும், தன்
ஆதிக்கத்தை மீறிவிடுகிறவர்கள் அன்றுவரை தன்னோடு உண்மையாக உழைத்தவர்கள்
என்பதைக்கூடச் சிறிதும் கவனியாது அந்த நல்லவர்களைத் தொலைத்து விடவும், ஆட்சியிலிருந்து
அகற்றிவிடவும் துணியும் என்பதற்கும் உதாரணமாகத்தான், குருநாதர்
மன்னனைத் தொலைத்துத் தனது இஷ்டப்படி தலையாட்டும் வேறொரு நபரைத் தேர்ந்தெடுக்க
முயன்றார் என்பதைச் சித்திரித்தேன். அதோடு
மட்டுமல்ல, மக்களின் பிரதிநிதியான நாடோடியோடு
நல்லவனான மன்னன் இணைந்துவிட்டால் எப்படி ஒருவரை ஒருவர் காப்பாற்றிக் நாட்டை
நன்னிலைக்குக் கொண்டுவர முடியும் என்பதையும் விளக்கிக் காட்ட வேண்டுமென்று
விரும்பினேன். அதே சமயத்தில் நாட்டில் "கட்சி தான் பெரிது, மக்களல்ல'' என்ற
எண்ணத்தில் வாழ்ந்து தன் கட்சியின் எண்ணத்தை நிறைவேற்ற எந்தவித செயல்களில்
ஈடுபடவும்
தயாராயிருப்பவர்களைப் பற்றி விளக்குவதற்காகவே வீரபாகுவின் கூட்டத்தாரை காண்பித்து
அவர்களின் பகுத்தறிவிற்கு அப்பாற்பட்ட - அன்பைப்
பற்றிக் கவலைப்படாத வன்செயல்களைப் பற்றித் தெளிவுபடுத்த முயன்றேன்.
இவ்வாறு
நமது நாட்டு அரசியலையும் மக்களின் நிலையையும் பின்னணியாகக் கொண்டு அமைந்த கதைதான் "நாடோடி மன்னன்'. "மக்கள் எல்லோரும் நல்லவர்கள் தான். சந்தர்ப்பமும்
சூழ்நிலையும்தான் அவர்களை எங்கோ கொண்டு நிறுத்துகின்றன.... அவைகளை தமதாக்கிக் கொண்டால் நாடு நலம் பெறும்'' என்பதைத்
தெளிவுபடுத்த முயலுவதுதான் "நாடோடி
மன்னன்” கதை.
என்னுடைய
கொள்கையையும் எடுத்துச் சொல்லி, அதே
நேரத்தில் எந்தத் தரப்பினரின் மனத்தையும் புண்படுத்தாமல் நிகழ்ச்சிகளை அமைத்து
மக்களின் பாராட்டைப் பெற முடிந்தது என்றால் அது பெரிய வெற்றி தானே?
அதோடு
புதிய, ஆனால் தேவையான, சில
சட்டங்களைச் சொல்லுகிறது "நாடோடி
மன்னன்" கதை.
இதிலேயும்
சிலருக்குக் கருத்து வேறுபாடு உண்டு. "இது
சினிமாவில் சொல்லலாம். நடைமுறைக்கு
ஒத்துவருமா' என்பதே அந்த வேறுபாடு.
நான்
சொல்லுவேன் : மக்களுக்குத் தேவையானதா - இல்லையா
என்று விவாதிக்க வேண்டுமே தவிர, இப்போது
முடியுமா, முடியாதா என்று வாதிப்பது சரியல்ல. கொள்கை
சரியா இல்லையா என்று விவாதித்து முடிவிற்கு வர வேண்டுமே தவிர, சில
நூறு அடிகளில் சொல்லப்படும் விஷயம் முழு விளக்கத்துடன் கூடியது என்று முடிவு
கட்டுவதும் சரியல்ல....
என்னைப்பற்றிச்
சில பட முதலாளிகள் தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காகக் கூறும் குற்றச்
சாட்டுகளில் "கடவுளைப்பற்றிப் பேசக்
கூடாதென்றும் கடவுளைத் திட்ட வேண்டுமென்றும் வற்புறுத்துவதாகச் சொல்வதுண்டு.
இந்த
நாட்டில் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் மிக மிகக் குறைவான எண்ணிக்கை உள்ளவர்கள்.
அதேபோல்
இந்த நாட்டில் வசதியோடு நிம்மதியாக வாழ்பவர்கள் மிக மிகக் குறைந்த எண்ணிக்கை
உள்ளவர்கள்.
இவைகளை
வைத்துக் கடவுள் நம்பிக்கையை விவாதித்தால் சரியான விளக்கம் பெற இயலாமற் போகும்.
ஆகவே
மக்கள் வாழ வேண்டிய நேர்மையான முறைகளைப் பற்றியும் - ஏழ்மையைச்
சட்டத்திற்குட்பட்டு எப்படிப் போக்குவது என்பதையும் - மக்கள்
எல்லோருக்கும் எப்படிப் பண்பாட்டைத் தெரிவிப்பது என்ற வகையையும் கலைஞர்கள்
செயற்படுத்த முயல வேண்டும் என்பதுதான் எண்ணம்.
ஒருவன
திருடதவனாக இருந்தால் அவனால் மற்றவர்களுக்கேற்படும் தொல்லை குறைகிறது. அதுபோல்
ஒருவன் கல்வியை சொல்லிக் கொடுத்தானாகில் பல் நல்லாசிரியர்கள் தோன்றுவார்கள்.
இவை
போன்றவைகளின் பலனால் மக்கள் உள்ளத்தூய்மை
பெற, அன்பு வழியில் மக்கள் வாழ இறைவனைத்
தொழுவதால் அடையும் பயனை மேலே சொன்ன செயல்களின் மூலம் பெறுவர். இதைத்தான்
செய்ய நான் விரும்புகிறேன் எனது கலைத் தொழிலின் மூலமாக.
அதை
ஓரளவிற்கு நிறைவேற்றுகிறது நாடோடி மன்னன் கதை.
ஆகவே
“நாடோடி மன்னன்'' படத்திற்கு
வெற்றி என்றால் முதலில் கதைக்கு வெற்றி.
தொடரும் ......
Comments
Post a Comment