அழைத்தது “அன்பே வா”
ஏவி.எம்.புரொடக்க்ஷன்ஸ் தயாரித்து வரும் அன்பே வா' வர்ணப் படத்தின் வெளிப்புறக் காட்சிகள் சமீபத்தில் படமாக்கப்பட்டன.
இந்தப் படத்தில் குறிப்பிடத்தக்க பல விசேஷ அம்சங்கள் இருக்கின்றன. ஏவி. எம். ஸ்டூடியோவில் வளரும் ஐம்பதாவது படம் இது.இதுவே ஏவி.எம் எடுக்கும் முதல் வர்ணப்படமுமாகும்.
'புரட்சி நடிகர்' எம்.ஜி.ஆர். நடிக்கும், முதல் ஏவி.எம். தயாரிப்பும் இதுதான்.
இந்தப் படத்திற்கு கதை அமைத்து, டைரக்ட் செய்து வரும் திருலோகசந்தருக்கும் இதுவே முதல் வர்ணப்படமாகும்.
ஏ.வி.எம் புரொடக்க்ஷன்ஸ் சார்பில் எம்.முருகன், எம்.குமரன், எம் சரவணன் மூவரும் சேர்ந்து தயாரித்து வரும் இப்படத்தை மாருதி ராவ் ஒளிப்பதிவு செய்து வருகிறார். அவர் ஒளிப்பதிவு செய்யும் முதல் வர்ணப் படமும் இதுதான்.
இந்தப் படத்தில் ஹாஸ்ய நடிகர் டி.ஆர்.ராமச்சந்திரன் தகப்பனார் வேஷமேற்று நடித்து வருகிறார்.
ஏவி.எம்.மில் அவர் கடைசியாக நடித்த படம் வாழ்க்கை. அதில் வைஜயந்திமாலாவுடன் கதாநாயகனாக நடித்தார் அவர். இப்போது அதே ஸ்டூடியோவில் அப்பாவாக வேஷம் போட்டிருக்கிறார். இந்தப் படத்தின் வெளிப்பாக் காட்சிகளின் படப்பிடிப்பின் போது, நடைபெற்ற சம்பவங்களைக் கொண்டு தொகுக்கப்பட்டிருக்கும் பிரத்தியேகமான கட்டுரை ஒன்றும் இதே இதழில் வேறொரு இடத்தில் பிரசுரிக்கப் பட்டிருக்கிறது என்பதையும் தெரி விக்கக்கொள்கிறோம்
அழைத்தது அன்பே வா!
பச்சைப் பசேலென்ற - புல் வெளியைமேடும் பள்ளமுமான அந்த இடத்தில் கண்டபோது, காற்றில் அலை அலையாக மிதந்தாடும் பச்சைப் பட்டாடையைப் பார்ப்பது போலவே இருந்தது. மேலே மலைப்பாங்கான பிரதேசத்திலிருந்து கீழ் நோக்கி வந்து கொண்டிருந்த பாதை, இந்தப் புல் திடலை அணைத்தாற்போல ஓடிக்கொண்டிருந்தது. இந்தப் புல்தரையைச் சுற்றினாற் போல நெடி துயர்ந்து நின்ற யூகலிப்டஸ் மரங்கள் அரண் வைத்தாற் போல காட்சி தந்து கொண்டிருந்தன.
புல் தரையின் ஒரு ஓரத்தில் மஞசளும் சிவப்பும் ஊதாவும் பச்சையு மாக மாற்றி மாற்றி தைக்கப்பட்ட ஒரு பெரிய துணிக்குடையின் கீழ் காமிரா வைக்கப்பட்டிருந்தது, அதன் அருகே பழுப்பு நிற ஜெர்க்கினும் வெள்ளை பாண்டும் தொப்பியும் அணிந்தபடி ஒளிப்பதிவாளர் மாருதி ராவ் நின்றிருந்தார். காமிராவுக்குச் சற்றுத் தள்ளிப் போடப்பட்டிருந்த மடக்கு நாற்காலியில் நீலநிற புல்கை சுவெட்டருடன் டைரக்டர் திருலோகச்ந்தர் அமர்ந்திருந்தார். அவ ருக்கு இரண்டு பக்கங்களிலும் ‘அன்பே வா’ படத்தின் தயாரிப் பாளர்களான முருகன், சரவணன் இருவரும் உட்கார்ந்திருந்தார்கள். புல்தரையைச் சுற்றி வந்த அந்தப் பாதையில் நீலநிறத்தில் புத்தம் புதிய பஸ் ஒன்று நின்றிருந்தது. அதன் உள்ளே சிலர் உட்கார்ந்திருந்கார்கள். வெளியே அதன் மீது ஒய்யாரமாகச் சாய்ந்தபடியும், அருகிலும் பல பெண்களும் ஆண்களும் விதவிதமான உடைகளை அணிந்து. இங்குமங்குமாகப் பட்டாம்பூச்சிகள் பறப்பது போலப் போய்க் கொண்டிருந்தார்கள்.
“அன்பே வா” வெளிப்புறக் காட்சிக்கு அதன் தயாரிப்பாளர்கள் என்னை அழைத்திருந்தனர். நானும் தயாரிப்பாளர்கள் மூவரில் ஒருவருமன குமானும்தான் கடைசியாக அங்கு கிளம்பிச் சென்றோம்.
ஊட்டிக்கு வந்த நாங்கள் படப்பிடிப்பு நடை பெறும் இடத்திற்குச் சென்ற போது கண்ட காட்சி யைத்தான் நான் மேலே விவரித் திருக்கிறேன். அப்போது அங்கு படப்பிடிப்பு நடை பெற வில்லை ,
எனக்காகக் காத்திருப்பதென் ஹால் நான் தான் வந்து விட்டே னே, ஆரம்பிக்கலாமே!'' என்றார் குமரன். அன்றுதானே அவர் முதன் முதலாக இந்த வெளிப்புறக் காட்சிப் படப்பிடிப்புக்கு வருகிறார்! அதனால் தான் இப்ப டித் தமாஷாகக் குறிப்பிட்டார்!
"நீங்கள மட்டும் வந்தால் பரவாயில்லையே! கூட இவரையும் அழைத்து வந்து விட்டீர்களே!" என்று டைரக்டர் திருலோகசந்தர் சொன்னார் !
நான் என்னையே ஒரு முறை பார்த்துக் கொண்டேன்.
யாரைச் சொல்கிறீர்கள்?'' என்றார் குமரன்.
"அதோ அவரைக் கேளுங்கள், சொல்வார்" என்று, கையை ஒரு திசையில் சுட்டிக் காட்டினார் டைரக்டர் திருலோகசந்தர்.
அந்தத் திசையில் -
ஒளிப்பதிவாளர் மாருதிராவின் உதவியாளர் புண்ணியகோடி, கையில் சதுரமான பிரௌன் நிற கண்ணாடியை வைத்துக் கொண்டு, ஆகாயத்தை அளந்து விடுபவர் போல அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தார்.
எங்கள் பேச்சைக் கேள்விப் பட்ட அவர், வேறு யாரையும் சொல்லலை சார்! இந்த மேகங்ளைத் தான் சொல்கிறார். காலையிலிருந்து, இந்த மேகமும் சூரியனும் எப்படியெல்லாம் ஓடிப் பிடித்து, கண்ணாமூச்சி ஆடுகின்றன தெரியுமா?... மேகம் எப்போ விலகும் என்று நான் கண்ணாடியிலே பார்த்துப் பார்த்து, என் கழுத்தெல்லாம் வலியெடுக்க ஆரம்பித்து விட்டது சார்!... சார்! இன்று தோன்றுகிறது...உதகமண்டலம் என்று இதற்குப் பெயர் வைத்திருப்பதை 'மேகமண்டலம்'னு கூட வச்சிருக்கலாம்! என்று சொன்னபோது, எல்லாருமே கைக் கொட்டினார்கள்!
“பல்லாவரத்திலே அடிக்குது வெய்யில். இங்கே அடிக்கக் கூடாதா?” என்று புண்ணிய கோடி சொன்ன முகூர்த்தமோ என்னமோ, மறு நாள் முதல் உதகமண்டலம் மேகமண்டலமாக இல்லை. பதிலுக்கு பளிச்சென்று வெய்யிலடிக்க பல்லாவரமாகவே மாறி விட்டது!
நாங்கள் சென்ற முதல் நாள் -
அன்று 'மேக் - அப்’புடன் டி.ஆர்.ராமச்சந்திரன் வந்திருந்தார். டைரக்டர் திருலோகசந்தர் அவர் வந்ததும், முன்தினம் நடைபெற்ற ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தைச் சொல்ல ஆரம்பித்தார்.
வந்த முதல் நாளன்று வெறும் சட்டையும் வேட்டியுமாக வெளியே வந்த டி.ஆர்.ஆர். டைரக்டர் திருலோகசந்தரும், மற்றவர்களும் ஸ்வெட்டருடன் இருப்பதைப் பார்த்து, "இது என்ன குளிர்னு, ஸ்வெட்டர் மாட்டிக்கிட்டிருக்கீங்க? பூ! இதெல்லாம் ஒரு குளிரா!'' என்று கிண்டல் செய்ய ஆரம்பித்தார்.
“இப்போது பகல் நேரம். தவிர, இப்பத்தான் வந்திருக்கீங்க. கொஞ்ச நேரம் பொறுத்துச் சொல்லுங்க!'' என்றார் டைரக்டர்.
சில மணி நேரம் சென்றிருக்கும். அதாவது மாலை மணி மூன்றிருக் கும். டி. ஆர். ஆர். மெல்ல டைரக்டரிடம் வந்தார்.
"ஆமாங்க! காத்து கொஞ்சம் சிலு சிலுன்று தான் வீசுது" என்று கைகளிரண்டையும் உடலோடு உடலாக இறுகக் கட்டிக் கொண்டு சொன்னார். நாலு மணிக்கு டி.ஆர்.ஆர். ஒரு ஸ்வெட்டர் போட்டுக் கொண்டு வந்தார். "ஆமாம்! கொஞ்சம் குளிருச்சு! எழுந்து மாட்டிக்கிட்டேன்!'' என்றார் அசடு வழிய.
ஐந்திருக்கும். கழுத்தையும் தலையையும் சுற்றி ஒரு மப்ளரைக் கட்டிக்கொண்டு வெளியே வந்தார் டி. ஆர். ஆர்.
ஐந்தரைக்கு மறுபடியும் தன் அறைக்குள் போனவர், ஆறரைக்கு வெளியே வந்தார். ஒரு பெரிய கம்பளியைப் போர்த்தியபடி!
டைரக்டர் அவரை ஒன்றும் கேட்கவே இல்லை! ஒவ்வொரு சமயமும் ஒவ்வொன்றை எடுத்து மாட்டிக்கொண்டு வெளியே வந்த போது, அவராகவே “நீங்க சொன்னது சரிதான்!” என்று டைாக்டரிடம் சொல்லிக் கொண்டே வந்தார்.
கடைசியாக அவர் கம்பளியைப் போர்த்திக்கொண்டு வந்தபோது கம்பளியைப் பிடித்துக் கொண்டிருந்த அவரது கைகளிரண்டும் நடுங்குவதைப் பார்த்த. தயாரிப்பாளர்களில் ஒருவரான முருகன், “மிஸ்டர் டி.ஆர்.ஆர். இந்த உல்லன் கையுறையைப் போட்டுக் கொள்ளுங்கள். உங்கள் விரல்கள் நடனமாடுவதை நிறுத்திவிடும்!'' என்று தன் கையிலிருந்த உறைகளைக் கழற்றிக் கொடுத்தரர். கொஞ்ச நேரம்தான் வெளியில் டி.ஆர்.ஆர். நின்றிருப்பார்!
“அப்பப்பா! நம்மாலே முடியாதப்பா!” என்று அறைக்குள் சென்ற டி. ஆர்.ஆர்.ரை, பின்னர் அறை முழுதும் தேடிப் பார்த்தும் காண முடியவில்லை!
கட்டிலின்மோல, மூன்று கம்பளி களுக்கடியில், மின்சாரக் கணப் பையும் போட்டுக் கொண்டு படுத்திருந்தார் அவர்!
டைரக்டர் திருலோகசந்தர் எங்களிடம் இதைச் சொல்லி வந்த போது, அருகிலிருந்த டி.ஆர்.ஆர். “டைரக்டர் சொல்றது பொய் சார்! மூன்று கம்பளி யெல்லாம் இல்லை. சுத்த டூப்! நான்குதான் போட்டுக் கொண்டி ருந்தேன்!'' என்று திருத்தினார் டி. ஆர். ஆர்.
“அன்பே வா” படத்திற்கான வெளிப்புறக் காட்சிகளில் பங் கெடுத்துக் கொள்ள, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அசோகண், நாகேஷ். டி.ஆர்.ஆர். ராம ராவ், பி.டி.சம்பந்தம், சரோஜா தேவி, மாதவி, மனோரமா, முத்து லட்சுமி, பாக்கியம் மற்றும் நாற்பது ஆண்களும் பெண்களும் வந்திருந்தார்கள். இவர்கள் தவிர, புரொடக்க்ஷன், டெக்னீஷியன்கள் தரப்பில் சுமார் ஐம்பது பேர்கள் வந்திருந்தார்கள்.
தாசப்பிரகாஷ் ஓட்டலில் சரோஜாதேவி, டைரக்டர், தயா ரிப்பாளர்கள், மாதவி, பாக்கியம், முத்துலட்சுமி, மனோரமா, நாகேஷ் முதலியோருடன் நானும் தங்கியிருந்தேன்.
இந்த ஓட்டவிலேயே கூட வந்திருந்த நாற்பது ஆண்களும், பெண் களும் தங்கியிருந்தார்கள்.
எம்.ஜி.ஆர். சுதர்சனம் என்ற தணிப் பங்களாவில் தங்கியிருந்தார். நாங்கள் சென்றது செப்டம்பர் இறுதியில். அப்போது சீசன் அல்ல. எனவே மாலை நான்கு மணிக்கெல்லாம் லேசாக குளிர ஆரம்பித்து விடும். காலை எட்டு மணி வரை குளிராகத்தான் இருக்கும்.
விடியற்காலை மூன்று மணிக்கெல்லாம் இந்த நாற்பது ஆண் களுக்கும் பெண்களுக்கும் மேக்அப்' போட ஆரம்பிக்கப்பட்டு விடும். அப்போதுதான் ஏழு அல்லது எட்டு மணிக்கெல்லாம் எல்லாரும் படப்பிடிப்பு நடைபெறும் இடத்திற்கு வந்து சேர முடியும்.
வந்திருந்த எல்லாரும் தங்கள் கடமைகளை உணர்ந்து , பணரி யாற்ற உற்சாகத்துடன் முன் வந்தார்கள். ஊட்டியே உறக்கத்தில் ஆழ்ந்திருக்கும் அந்த நேரத்தில் தாசப்பிரகாஷ் ஓட்டல் மட்டும் விழித்துக் கொண்டு, சுருசுருப்பாக இயங்க ஆரம்பித்து விடும்!
ஓட்டலின் ஒரு பகுதியில் இப்படி.
இங்கே, நாங்கள் தங்கியிருந்த இடத்தில் தயாரிப்பாளர்களில் ஒருவரான முருகன், நான்கு மணிக் கெல்லாம் எழுந்து, ஒவ்வொரு அறையாக நாங்கள் தங்கியிருக்கும் இடத்திற்கு வந்து, எங்களை எழுப்பி விட்டு விடுவார். ஊட்டிக்கு நானும் குமரனும் போய்ச் சேர்ந்த மறுநாள் சரோஜாதேவியும் எம்.ஜி.ஆரும் வந்தார்கள்.
சரோஜாதேவி, ஊட்டியிலே இந்த ஓட்டல் என்னுடைய பர்மெனெண்ட் வீடு மாதிரி ஆயிடுச்சு. வருஷா வருஷம் ஏதாவது ஒரு படத்துக்கு இங்கு வந்து விடுவேன்! ஆக என்னைப் பொருத்த வரை இந்த ஊர் குளிர் எல்லாம் பழக்கப்பட்டு விட்டது!'' என்று சொன்னார்.
இதற்கேற்ப, அவர் பிரதிதினமும் மாலை சுமார் ஆறு மணிக்கு மாதவி, மற்றும் நடனப் பெண்கள் புடை சூழ, கீழே உள்ள கோயி லொன்றுக்கு நடந்தே போய் பூஜை செய்து விட்டு வருவார்.
ஒரு நாள் எங்கள் ஓட்டலின் அறையில் உட்கார்ந்து கொண்டு மக்கள் திலகம், டி.ஆர்.ஆர்.. “அன்பே வா” தயாரிப்பாளர்களான முருகன், குமரன், நான் ஆகியோர் சீட்டு ஆடிக்கொண்டிருந்த போது, தேங்காய்ப் பிரசாகக்துடன் எங்கள் அறைக்கு வந்தார் சரோஜாதேவி. மக்கள் திலகம், “தினமும் கோயிலுக்குப் போய் என்ன வேண்டிப்பீங்க?” என்று கேட்டார்.
"நல்லா வெய்யிலடிக்கணும். படப்பிடிப்பு நல்லா நடக்கணும். சீக்கிரம் வேலையெ முடித்து விட்டு நாங்களெல்லாரும் ஊருக்குத் திரும்ப அருள் புரியணும்!'' என்று கடவுளிடம் பிரார்த்தனை செய்து விட்டு வருகிறேன் என்று சொன்னார் சரோஜாதேவி.
‘மக்கள் திலகம்' வந்த முதல் நாள். கோவை வரையில் விமானத்தில் வந்து, பின்னர் அங்கிருந்து காரில் ஊட்டிக்கு வந்திருந்தார். எனவே நீண்ட தூர பிரயாணத்தினால் அவர் களைப்பாக இருப்பார், ஓய்வாக இருக்கட்டும், மறு நாள் காலை சென்று அவரைப் பார்க்கலாம் என்று நாங்கள் முடிவு செய்தோம்.
மாலை ஏழு மணி இருக்கும்.
நாங்கள் மாடி அறையில் உட்கார்ந்து கொண்டு பேசிக் கொண் டிருந்தோம்.
திடீரென எங்கள் அறைக்குள் நுழைந்தார் எம்.ஜி.ஆர். எங்களுக்கு ஒரே திகைப்பு! நீண்ட நேரம் அன்று எங்களுடன் அறையில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்.
ஊட்டியில் தனக்குள்ள அனுபவங்களைப் பற்றிச் சொன்னார். இலங்கைக்கும் சிங்கப்பூருக்கும் தான் எடுக்கப்போகும் சொந்தப் பட விஷயமாகப் போகப் போவதைச் சொன்னார். செஸ் விளையாட ஆரம்பித்திருப்பதைச் சொன்னார். இந்தியா - சீனா போரைப் பற்றிப் பேசினார்!
எவ்வளவு விஷயங்களை அவர் பேசுகிறார். ஓய்வில்லாமல் படப் பிடிப்பிலேயே மூழ்கிக் கிடக்கும் அவருக்கு எப்படி இவ்வளவு சங்க திகளைத் தெரிந்து கொள்ள முடிகிறது ?
எப்படி இதற்கு நேரம் ஒதுக்குகிறார் என்பது வியப்பாகவே இருந்தது! எம்.ஜி.ஆர். வந்த மறுநாள், படப்பிடிப்பில் அவரும் கலந்து கொண்டார்.
தொடரும் .....
பேசும் படம் டிசம்பர் மாதம் 1965
Comments
Post a Comment