மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் மாபெரும் படைப்பான உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்கும் எனக்கும் சம்பந்தம் உண்டு என்று நான் சொன்னால் உங்களுக்கெல்லாம் வியப்பாக இருக்கும்.
ஆனால் அது உண்மை. அந்தப் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நான் நடிக்க வேண்டும் என்பது அவரது விருப்பம். அதை அவர் என்னிடம் தெரிவித்தபோது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.ஆனால் அப்போது நான் கருத்தறிந்திருந்த ஆரம்பக் காலம். அந்த நிலையில் வெளி நாட்டுக்குச் செல்லுவது அவ்வளவாக உசிதமாக இருக்காது என்று என் தாயார், கணவர், என் மாமனார் ஆகியோர் கருதினார்கள். ஆகவே நான் அவரது யோசனையை ஏற்றுக் கொள்ள முடியாதவளாகி விட்டேன். பிறகு வெளிநாடுகளில் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு சென்னை திரும்பியதும் இதய வீணை படப்பிடிப்பு ஜெமினி ஸ்டுடியோவில் தொடங்கியது. அப்போது ஒரு நாள் படப்பிடிப்பின் இடைவேளை நேரத்தில் என்னை அவர் அழைத்து உலகம் சுற்றும் வாலிபன் படத்தில்தான் நீ நடிக்கவில்லை போகட்டும். அப்படத்தை திரையில் போட்டுக் காட்டுகிறேன் என்று கூறி அதன்படி அந்தப் படத்தைப் போட்டுக் காட்டினார். படத்தைப் பார்த்த பிறகு எனக்கு எந்த ரோலை அவர் அளிக்க விரும்பினார் என்பதை என்னால் ஓரளவுக்கு அறிந்து கொள்ள முடிந்தது. அந்தப் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருந்தால் உள்ளபடியே பெரு மகிழ்ச்சி அடைந்திருப்பேன். படம் பார்க்கும் போது நேரம் போனதே தெரியவில்லை. அத்தனை தத்ரூபமான இயற்கைக் காட்சிகளும், கலாரஸனைக்குரிய எல்லா அம்சங்களும் அதில் பூரணமாக இடம் பெற்றுள்ளன.
படத்தில் நடிக்க முடியாது போனாலும் படத்தையாவது பார் என்று பெருந்தன்மையோடு கூறுகிற பண்பும், பாசமும் எம்.ஜி.ஆருக்கே உரித்தானது. வெளிநாடுகளில் படப்பிடிப்புகள் நடந்தபோது தங்களிடம் எம்.ஜி.ஆரும், வி.என்.ஜானகி அவர்களும் எந்த அளவுக்கு அன்பும், பாசமும், ஊக்கமும் காட்டி ஆயிரமாயிரம் மைல்களுக்கு அப்பால் கடல் கடந்து வெளிநாட்டிற்கு வந்திருந்த போதிலும் எந்தக் குறையும் கொஞ்சமும் வைக்காமல் கவனித்துக் கொண்டார்கள் என்பதை மஞ்சுளா போன்ற தோழிகள் கூறிடக் கேட்டு பூரித்துப் போனேன்.
நல்ல உள்ளம் படைத்த மக்கள் திலகம் அவர்களது இந்த சாதனை படத்தின் பெருமை, உலகின் ஒவ்வொரு பகுதிக்கும் பரவிப் புகழ் கொடி நாட்ட விருக்கிறது என்பதில் ஐயமில்லை .
உலகம் சுற்றும் வாலிபன் மலர்
உரிமைக்குரல் எம்.ஜி.ஆர் இதழ் வெளியிடு -2010
Comments
Post a Comment