சென்னையில் அறிஞர் அண்ணா பிறந்தநாள்
மாபெரும் கலைஞர்கள் திருவிழா!
ஒரே நாளில் ரூபாய் 30,000 வசூல்!
ரூ.16,000 எம்.ஜி.ஆரிடம் தரப்பட்ட து
சென்ற 25-9-66ம் நாளன்று சென்னை மாவட்ட எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றத்தினரால் எஸ்.ஐ.ஏ.ஏ.திடலில் நடைபெற்ற 'அறிஞர் அண்ணா பிறந்தநாள் திருவிழா' வில் வசூலான மொத்தத் தொகை ரூ. 30,000 ஆகும்.
இதில், செலவு போக பதினாறாயிரம் ரூபாய் (16,000) எம்.ஜி.ஆர். அவர்களிடம் அளிக்கப்பட்டது.
இந்தத் தொகை விரைவிலேயே பொதுமக்கள் நலனுக்காகப் பயன்படுத்தப்படும்.
அன்று நடைபெற்ற நிகழ்ச்சி களின் முழு விபரம் வருமாறு:
சென்ற வாரம் சென்னை மாவட்ட எம். ஜி. ஆர் ரசிகர் மன்றத்தினர் அறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாள் விழாவினை மிகச் சிறப்பாகக் கொண்டாடினர் சென்னை எஸ்.ஐ.ஏ.ஏ. திடலில், கலைஞர் திருவிழாவாகக் கொண்டாடப்பட்டது இந்த விழா.
எம்.ஜி.ஆர். முதலான திரையுலகக் கலைஞர்களும் பிரமுகர்களும் அந்த விழாவிலே பெரும் பங்கேற்றனர்.
அன்று நடந்த அந்த விழாவுக்கு, மாலை இரண்டு மணியிலிருந்தே பூந்தமல்லி நெடுஞ்சாலையிலிருந்து எஸ்.ஐ.ஏ.ஏ. மைதானம் வரை வண்டி வாகனங்கள் செல்ல முடியாதவாறு மக்கள் கூட்டம் அலைபாய்ந்து கொண்டிருந்தது.
எம்.ஜி.ஆர். பேச்சு :
கலைஞர் திருவிழா நிகழ்ச்சிகளின் இறுதியில் திரு. எம்.ஜி.ஆர் அவர்கள் ஆற்றிய உரையின் சுருக்கம் கீழே தரப்பட்டிருக்கிறது :
சிலபல நாட்களுக்குப் பின்னே உங்களையெல்லாம் சந்திக்கின்ற வாய்ப்பை சென்னை மாவட்ட எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றத்தினர் எனக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றனர்.
நமது உள்ளத்திலே எல்லாம் தனி இடம் பெற்றவரும், மக்கள் சீரோடும் சிறப்போடும் வாழவேண்டும் என்கிற நல்லெண்ணம் கொண்டவருமான நமது நல்வழிகாட்டி அறிஞர் - அண்ணா அவர்களின் பிறந்தநாள் விழாமூலம், இத்தகைய அரிய வாய்ப்பினை எனக்களித்த நண்பர்களுக்குக் கை கூப்பி என் நன்றியைத் தெரிவீத்துக் கொள்கிறேன்.
சென்னை மாநகரில் இரண்டாவது முறையாக இந்த விழா நடப்பது நமக்கெல்லாம் பெருமை தருவதாகும்.
இதற்கு முன்னால் இங்கே நடந்த விழா குடும்பத்தார் நடத்திய விழா; இது கலைஞர்கள் நடத்தும் விழா; குடும்பத்தார் நடத்தும் விழாவுக்கும் இன்று நடக்கும் விழாவுக்கும் வித்தியாசம் உண்டு.
வீட்டில் உள்ள பெரியவரை குடும்பத்தில் உள்ளவர்களும், சுற்றத்தார்களும், உறவினர்களும் பாராட்டுவது...... பெருமைப் படுத்துவது இன்றியமையாதது; அவசியமானதும்கூட.
அறிஞர் அண்ணா நமக்கு மட்டும் சொந்தமல்ல; கட்சிக்கு அப்பாற்பட்ட தேசீய நிலவு! உதயசூரியன்! என்வழி ஒரேவழி; நேர்வழி; அது அண்ணாகாட்டும் வழி!
அதைத்தான் சென்னை மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகம் செய்தது. தலைமைக் கழகமும் அதிலே பங்கேற்றது.
அந்த விழாவின் மூலம் சென்னை மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தினர் அண்ணாவைப் பெருமைப் படுத்தி, தாங்களும் உயர்வு பெற்றார்கள்.
இன்று நடக்கும் விழா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த நானும், வேறு பல கட்சிகளைச் சார்ந்த கலைஞர்களும் ரசிகர்களும் கூடி நடத்தும் விழா ஆகும்.
நாட்டுக்காக, நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்காக வாழ்கின்ற பெரியவர்களை உறவினர்கள் மட்டும் பாராட்டிப் பெருமைப்படுத்தினால் போதாது; ஊரும் உலகமும் பாராட்ட வேண்டும்.
அறிஞர் அண்ணா அவர்களைக் கழகத்தினர் மட்டும் பாராட்டினால் போதாது. மாற்றார்களால், கழகக் கொள்கைகளை ஏற்காதவர்களால், ஏற்கமுடியாதவர்களால் அறிஞர் அண்ணா பாராட்டப்பட வேண்டும்; அது தான் நாமெல்லாம் எண்ணி எண்ணிப் பெருமைப்படத் தக்கதாகும்.
அண்ணாவின் கொள்கைகளை நேரிடையாக ஏற்காதவர்கள், கழகக் கொள்கையிலே நம்பிக்கையில்லாதவர்கள் பலர் ஒன்று கூடி இந்த விழாவை நடத்துகிறார்கள்.
நல்லவர்களில் நல்லவர், தொண்டர்களின் தொண்டர், தன்னையே நாட்டுக்கு அர்ப்பணித்துக் கொண்டவர், மாபெரும் மக்கள் சக்தியை இயக்கும்மன்னர் நமது அண்ணனின் பிறந்த நாளைக் கொண்டாடி மகிழ்கிறோம் இன்றைய தினம்.
அண்ணா அவர்கள் தனிப்பட்டவர்களுக்கு மட்டும் சொந்த மானவரல்ல; தேசம் முழுவதற்கும் சொந்தமானவர்; தேசீயத் தலைமையேற்கும் வல்லமை பெற்றவர்.
இங்கே நடனமாடிய தோழியர் ஜெயலலிதா, கண்ணனையும் ராதையையும் பற்றி நடன மாடினார். நாம் கண்ணனை நம்பு கிறோமா என்ன?
தி.மு.கழகத்தில் இல்லாத, கழகக் கொள்கைகளை ஏற்றுக் கொள்ளாத தோழர் எம்.எஸ். விசுவநாதன் 'அண்ணா வாழ்க' என்று சற்று முன் இங்கே அழகாகப் பாடினார்.
இது எதைக் காட்டுகிறது?
அண்ணா அவர்கள் ஒரு குறுகிய வட்டத்தில் மட்டும் இல்லை. உச்சாணிக் கொம்பிலே இருக்கும் பணக்காரர்களுக்கு, ஏழை களுக்கு, பாட்டாளி மக்களுக்கு நம் கட்சிக் கொள்கைகளுக் குள்ளே கட்டுப்படாதவர்களுக்கு எல்லோருக்கும் சொந்த மானவர் நமது அண்ணா .
இப்படி-
கட்சிக்கு அப்பாற்பட்ட தேசீய நிலவாக, உதய சூரியனாக அறிஞர் அண்ணா அவர்கள் இருக்கிறார்கள்.
“திராவிட முன்னேற்றக் கழகத்தினர்தானே முன்பு அண்ணாவுக்கு விழா எடுத்தார்கள்; அவர்கள்தானே அண்ணாவைக் கொண்டாடுகிறார்கள்” என்று கேலி பேசுவோர் இதயத்தில் இந்த விழா, எல்லோருக்கும் பொதுவானவர் அண்ணா என்பதைப் பசுமரத்து ஆணிபோல் பதியவைக்கும்.
இங்கே மேடைக்கு வந்த பிறகு, அண்ணா அவர்களைப் பற்றி வாலி ஒரு பாட்டெழுதினார்; அவர் எழுதி முடித்த சிறிது நேரத்திற்குள்ளே, கழகத்தவரல்லாத விசுவநாதன் அதற்கு இசையமைத்து இனி மையாகப் பாடிக் காட்டினார்.
அவர்களை அத்தனைச் சுறு சுறுப்பாக இயக்கிய சக்தி எது?
அதுதான் அறிஞர் அண்ணாவின் தனிச் சிறப்பு. இந்த விழாவிலே இன்று இங்கு நாம் ஒரு உறுதி மொழியை எடுத்துக்கொள்ள வேண்டியது நமது கடமை யாகும். அறிஞர் அண்ணாவின் வழி செல்லும் நாம், அவருடைய எண்ணத்தை, குறிக்கோளைப் பின்பற்றி நடந்து வருகிறோமா என்று ஒவ்வொரு நாளும் நம்மை நாமே கேட்டுக் கொள்ள வேண்டும். மனிதன் மனிதன் மனிதனாக வாழவேண்டும் என்று அவர் கொண்டுள்ள நல்ல நோக்கத்தை நீங்களெல்லாம் எண்ணிப் பார்த்து, இந்த உறுதி மொழியை மேற்கொள்ள வேண்டும் என்று கைகூப்பி, தாள் பணிந்து கேட்டுக் கொள்கிறேன்.
அண்ணாவின் தியாகத்தை, திறமையை நாம் எடுத்துச் சொல்கிறோம்; தென்னாட்டுக் காந்தி என்கிறோம்; இமயமலை உச்சி என்று புகழ்கிறோம். நாம் இப்படியெல்லாம் போற்றிப் புகழ்வதனாலே மட்டும் அண்ணாவின் புகழ் உயர்ந்து விடாது; நாம் புகழாமல் இருந்து விட்டால் அவருடைய புகழ் குறைந்துவிடப் போவதுமில்லை .
நாட்டில் பிரளயமே வந்தாலும்கூட, அண்ணாவின் புகழ் பல்லாண்டு காலத்திற்கு நிலைத்து நிற்கும். அண்ணா அவர்களின் கருத்துப் பொக்கிஷங்களை நாம் பாதுகாக்க வேண்டும்.
இன்று நடக்கின்ற இந்த விழா, முன்பு நடந்த விழாவுக்குப் போட்டியாக நடத்தப் படுகிறதோ என்று கூட சந்தேகப்பட்டனராம் சிலர்.
இந்த விழாவுக்காக என்னிடமிருந்து ஒரு புதுக் காசுகூடப் போகவில்லை; நண்பர்கள் முயற்சி எடுத்துச் செய்கிறார்கள்.
எம்.ஜி.ஆர், ரசிகர் மன்றத்தார் இந்த விழாவை நடத்துகிறார்கள்; கட்சியில் ஈடுபட முடியாதவர்கள், நல்லவரின் பெரியவரின் வாழ்க்கையைப் புரிந்துகொண்டு பல்லாண்டுக் காலம் அவர் வாழ வேண்டும் என்கிற நல்ல நோக்கத்துடனே ஆசையாக இந்த விழாவை நடத்துகிறார்கள்.
இந்த விழாவில் வசூலான தொகை நல்ல காரியத்திற்காகப் பயன்படுத்தப்படும். அண்ணாவின் விருப்பப்படி எனது எண்ணப்படி இந்தத் தொகை செலவிடப்படும்.
இந்த விழாவிலே கலந்து கொண்ட கலைஞர்கள், அரசியலுக்காக இங்கே வரவில்லை. திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பரப்ப வரவில்லை. அண்ணாவை வாழ்த்தி மகிழ்வதற்காகவே வந்தார்கள்.
இதில் வசூலான தொகை, ஏழை மக்களுக்குப் பயன்படும் வகையில் செலவழிக்கப்படும்.
அறிஞர் அண்ணா அவர்களின் நல்லறிவின் சிகரமான திராவிட முன்னேற்றக் கழகத்திலே நான் இருக்கிறேன், இது என் உள்ளம் தந்த பொறுப்பு ஆகும்.
இது முழுக்க முழுக்க கழகத்தவர் நடத்தாத நிகழ்ச்சி என்று சொல்லும் போது, ஏன் கருப்பு சிகப்பு துண்டு போட்டிருக்கிறீர்கள்; இது தி.மு.கழகப் பிரச்சாரமல்லவா என்று கேட்கலாம்.எனக்கு வேறு வழி இல்லை !
உதய சூரியன் வாழ்க என்று கூறுகிறீர்களே; இது தி. மு. க.வுக்கு ஓட்டு சேகரிப்பதாகாதா என்று கேட்கலாம். எனக்கு வேறு வழி இல்லை !
அதைத் தவிர எனக்கு வேறு வழியே இல்லை!
என்னுடைய வழி ஒரே வழி; நேர்வழி; அதுதான் அறிஞர் அண்ணா காட்டும் வழி; திர விட முன்னேற்றக் கழகத்தின்வழி.
நாடு வாழ, நாம் வாழ அறிஞர் அண்ணா அவர்கள் பல்லாண்டுக் காலம் வாழ வேண்டும் என்று சொல்லி முடித்துக் கொள்கிறேன்.
வணக்கம்!
சமநீதி - 30-09-66
(எம்.ஜி.ஆர் அவர்கள் பேச்சு மட்டும் )
Comments
Post a Comment