1962 தேர்தலில் எம்.ஜி.ஆர். போகாத கிராமங்களோ, பட்டி தொட்டிகளோ தமிழகத்தில் கிடையாது...!
தஞ்சையில் மதிப்பிற்குரிய பரிசுத்த நாடார் அவர்களை எதிர்த்து எனது அருமை நண்பர் கருணாநிதி தி.மு.க. சார்பில் போட்டியிட்டார்.
அவருடைய வெற்றிக்காக அங்கே பிரச்சாரம் செய்யப் போன எம்.ஜி. ஆரை வைத்து ஊர்வலம் நடத்தினார் கருணாநிதி !
அந்த தேர்தலில்தான் தென் சென்னையில் நாஞ்சில் மனோகரன் போட்டியிட்டார்.
நாவுக்கரசரை எதிர்த்து மறைந்த சொல்லின் செல்வர் ஈ.வி.கே. சம்பத் போட்டியிட்டார்.
சம்பத் தேர்தல் கூட்டங்களிலே பேசும் போது, "சிங்கத்தின் குகையிலே. சிங்கத்தோடு போராட வந்திருக்கிறேன்" என்று கூறினார்.
அதற்கு பதில் அளிக்கும் வகையில் அமரர் பேரறிஞர் அண்ணா அவர்கள், "எனது அருமைத் தம்பி சம்பத் சிங்கத்தின் குகைக்குள்ளேயே புகுந்திருக்கிறார்.
ஆனால் பிப்ரவரி 25-ந் தேதி வெளியே வரப்போவது சிங்கமா..." என்று கேள்விக்குறியுடன் விட்டுவிட்டார்.
கேட்டுக் கொண்டிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களும் 'கொல்' என்று சிரித்து விட்டார்கள்.
தேர்தல் பிரச்சாரங்கள் ஒய்ந்து.
வாக்கு பதிவு முடிந்து ஓட்டு எண்ணிக்கை ஆரம்பித்தது.
எம்.ஜி.ஆர்.தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பி படப்பிடிப்பிலே கலந்து கொண்டு விட்டார்.
பகல் ஷுட்டிங் முடிந்து இரவு 10 மணிக்கு திரும்பிய எம்.ஜி.ஆர். என்னைக் கண்டதும், "தென் சென்னை முடிவு என்ன ஆயிற்று" என்று கேட்டார்.
"ஓட்டு எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். முடிவு தெரியவி தெரியவில்லை" என்று சொன்னேன்.
"முடிவு தெரிந்ததும் எனக்கு சொல்லுங்கள்" என்று சொல்லிவிட்டு படுக்கை அறைக்குச் சென்றார்.
எம்.ஜி.ஆரின் அறையில் இருந்த போனில் "டயல்" செய்தால் என் அறையில் உள்ள போனிலும் மணி அடிக்கும்.
காலை சுமார் நாலரை மணிக்கு போனில் டயல் செய்யும் சத்தம் வேகமாக கேட்டது.
இவ்வளவு அவசரமாக ஏன் போன் செய்கிறார் யாருக்கு என்று தெரியாமல் ஏதோ ஒரு வேகத்தில் மேலே ஓடினேன் நான்.
நான் போனதும் எம்.ஜி.ஆர். என்னை பார்த்து.
"ராத்திரி பன்னிரெண்டு மணிக்கு சதானந்தவதி (எம்.ஜி.ஆர். மனைவி) தண்ணீர் குடித்து விட்டு படுத்தாள்.
அதற்கு பின் நெடுநேரம் பேசிக் கொண்டிருந்தோம்.
காலையில் மருந்து கொடுக்க எழுப்பினால் எழுந்திருக்கவில்லை" என்று கூறினார்.
நான் தொட்டுப் பார்த்தேன். உடல் 'ஜில்' என்று இருந்தது.
சதானந்தவதியின் உடல் நிலையை தேற வைப்பதற்காக டாக்டர் பி.ஆர்.எஸ் எவ்வளவோ சிரமப்பட்டார்.
எம்.ஜி.ஆரும் எவ்வளவோ பணத்தை செலவு செய்தார்.
இவைகளுக்கு இடையில் விதி என்று ஒன்று இருப்பதை மறந்து விட்டோம்.
இரவு படுக்க சென்ற எம்.ஜி.ஆரின் மனைவி, பிறகு எழுந்திருக்கவே இல்லை . தூங்கினவள் நிரந்தர தூக்கத்திலே ஆழ்ந்துவிட்டார்.
சுமார் பத்து பன்னிரெண்டு ஆண்டுக்கு மேலாக நோயால் பீடிக்கப்பட்டு அல்லல் பட்டுக் கொண்டு இருந்த தன் மனைவி எப்படியும் குணம் அடைவாள் என்ற ஒரே நம்பிக்கையில் தான் சம்பாதித்த பணத்தில் பெரும்பகுதியை மருத்துவத்திற்காக செலவழித்து, அவள் குணம் அடையும் நாளை ஆவலோடு எதிர்பார்த்திருந்த எம்.ஜி.ஆருக்கு மனைவியின் திடீர் மறைவு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது.
எம்.ஜி.ஆரால் பேசவே முடியவில்லை . என் மனைவியும் குழந்தைகளும் "ஓ"வென்று கதறி அழ ஆரம்பித்து விட்டார்கள்.
நேரம் ஆக ஆக நண்பர்களும், உறவினர்களும் துக்கம் விசாரிக்க வரத் தொடங்கி விட்டார்கள்.
அந்த நேரத்தில் எனது நிலையே வேறுவிதமான இருந்தது. என்னுடைய முதல் மனைவி இறந்தது இதே காச நோயால்தான்.
அந்தக் காலத்தில் என் மனைவிக்கு வேண்டிய மருத்துவ சிகிச்சைகளை செய்து அவளை காப்பாற்ற முடியாத அளவுக்கு வசதிக் குறைவிலே இருந்தோம்.
இப்போது அப்படி அல்ல...! நாங்கள் ஓரளவுக்கு சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டபடியால், மருத்துவ வசதிகளை செய்து எப்படியும் எம்.ஜி.ஆரின் மனைவியை காப்பாற்றி விடலாம் என்ற நம்பிக்கையில் இருந்தேன்.
பன்னிரெண்டு ஆண்டு காலமாக நான் வளர்த்து வந்து நம்பிக்கையை "விதி" வென்று விட்டது.
காலம் கடந்து கொண்டே இருந்தது. மணி ஒன்பதுக்கு மேல் ஆகிவிட்டது. ஓர் இடி விழுந்து தாங்க முடியாமல் அல்லல் பட்டுக் கொண்டு இருந்த நாங்கள், இன்னொரு பேரிடிகாத்துக் கொண்டு இருக்கிறது என்பதை அறியாமலே இருந்தோம்.
அந்தப் பேரிட, காஞ்சியிலே தேர்தலில் நின்ற பேரறிஞர் அண்ணா அவர்கள் தோற்றுவிட்டார்கள் என்பதாகும்.
அண்ணா அவர்கள் தோற்றுவட்டார் என்று கூறுவதை விட தோற்கடிக்கப்பட்டார் என்று கூறுவதே பொருந்தமாகும்.
"தோற்றுவிட்டார்" என்றாலே தோற்கடிக்கப்பட்டார் என்றுதானே அர்த்தம் என்று நீங்கள் நினைக்கலாம். நான் ஏன் அப்படி கூறுகிறேன் என்றால், அந்தத் தேர்தலில் எல்லா எதிர்க்கட்சித் தலைவர்களும் தோற்கடிக்கப்பட்டார்கள்.
எதிர்கட்சிகளின் தலைவர்களை எல்லாம் தோற்கடிக்க வேண்டும் என்று திட்டம் தீட்டியே வேலை செய்து, அன்றைய தினம் காங்கிரசார் தோற்கடித்தார்கள் என்று நான் நினைக்கிறேன்.
தேர்தல் முடிவு தெரிந்தவுடன் அண்ணா அவர்கள் காஞ்சியில் இருந்து நேராக சென்னைக்கு வந்து எம்.ஜி.ஆருக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டு இருந்தார்.
யார் ஆறுதல் சொல்லி என்ன செய்வது? லேசில் ஆறுதல் சொல்லக்கூடிய நிகழ்ச்சியா இது...
மாலை சுமார் 4 மணிக்கு இறுதி ஊர்வலம் நடந்தது.
இறுதிச் சடங்குகளை முடித்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தோம்.
வீடு வந்து சேர்ந்த பின் பல எண்ணங்கள் எனக்கு தோன்ற ஆரம்பித்து விட்டன்.
1952-ல் நாங்கள் அப்போது அடையாறிலே குடியிருந்தோம். அந்த சமயம் எதிர்பாராமல் ஒரு நாள் இரவு தாயாருக்கு ரத்தக் கொதிப்பு நோய் அதிகமாகியது. மாடியில் இருந்து தாயாரை கீழே கொண்டு வந்து படுக்க வைத்துவிட்டு, டாக்டரை அழைத்து வந்தோம்.
டாக்டர் பரிசோதித்து விட்டு நோய் அதிகமாகி யிருப்பதாகக் கூறினார். ரத்தக் கொதிப்பு மட்டும் அல்லாமல், பக்கவாத நோயினாலும் தாயார் பாதிக்கப்பட்டார்.
நாங்கள் அடையாறு வீட்டை விட்டுவிட்டு, 160, லாயிட்ஸ் சாலை வீட்டிற்குக் குடி வந்தோம்.
என் மனைவியும், எம்.ஜி.ஆரின் மனைவி சதா னந்தவதியும் இரவு பகலாக தாயாருக்கு வேண்டிய பணிவிடைகளை செய்தார்கள்.
அவளுடைய நோயையும் பொருட்படுத்தாமல் தாயாரின் உடலை குணப் படுத்தும் பணியில் ஈடு பட்டு வந்தாள்.
இப்போது ஏற்பட்ட இதே நிகழ்ச்சியைப் போலத்தான் எவ்வளவோ சிரமப்பட்டும், பண செலவை பாராமல் மருத்துவ வசதிகளை செய்தும் கூட ஒரு செவ்வாய்க்கிழமை அன்று மாலை 3 மணி அளவில் எவ்வளவோ கஷ்டப்பட்டு எங்களை வளர்த்து ஆளாக்கிய எங்கள் தாயார் எங்களை விட்டுப் பிரிந்துவிட்டார்கள்.
இந்த நிகழ்ச்சிகள் எல்லாம் ஏதோ சினிமாப் படம் போல என் மனத் திரையிலே ஆடிக் கொண்டிருந்தது.
இது மட்டும் அல்ல, எம்.ஜி.ஆரின் முதல் மனைவி தங்கமணி, இரண்டு வருட குடும்ப வாழ்க்கையோடு இறைவனடி சேர்ந்தாள்.
இரண்டாவது மனைவி சதானந்தவதி மூன்று நான்கு வருட குடும்ப
நல் வாழ்க்கைக்குப் பிறகு -
நோய்வாய்ப்பட்டு பத்து பதினைந்து வருடம் நோயாளியாகவே இருந்து, 1962 பிப்ரவரி 24-ந்தேதி இரவு (அல்லது 25-ந்தேதி காலை) எம்.ஜி.ஆரையும் எங்கள் குடும்பத்தையும் விட்டுப் பிரிந்து சென்று விட்டாள்.
இனி எம். ஜி. ஆரின் நிலை? .....
ஒரே குழப்பமாக இருந்தது, எனக்கு....!
சில நாட்கள் கழிந்தன...!
எம்.ஜி.ஆருக்கு மாடியிலே உள்ள தன் அறைக்கு போகவே இடம் தரவில்லை . அவள் படுத்திருந்த கட்டில், அவள் நடமாடிய இடம், அவள் உபயோகித்துக் கொண்டிருந்த பொருட்கள், வெள்ளித் தட்டு, தம்ளர் இவைகளை எல்லாம் பார்த்து வேதனைப் பட்டுக்கொண்டிருந்து. அந்த அறையிலே இருக்க முடியாமல், எங்கள் வீட்டின் முன்னால் இருக்கும் பெரிய ஹாலில் வந்து உட்கார்ந்து பொழுதை கழித்துக்கொண்டு இருந்தான்.
மன மாற்றத்திற்காக ஒருசில நண்பர்களிடம் பேசிக்கொண்டு இருப்பார். அப்படி பேசிக் கொண்டு இருப்பவர்களில் பட அதிபர் சின்னப்பா தேவரும் ஒருவர்.
ஒருநாள் தேவர் என்னிடம் வந்து “இடமாற்றம் ஒருவேளை மனமாற்றத்தை ஏற்படுத்தலாம், எம்.ஜி.ஆர். ராமாவரம் வீட்டிலே போய் சில நாட்கள் தங்கியிருக்கலாமே...?
இதை எம்.ஜி.ஆரும் ஒப்புக்கொண்டார்” என்று கூறினார்,
“அவர் மனம் நிம்மதி, அடையும் நிலை ஏற்படுமானால் எனக்கு ஆட்சேபனை இல்லை " என்றேன்.
அதற்குப் பிறகுதான் எம்.ஜி.ஆர். ராமாவரம் வீட்டில் போய் தங்க ஆரம்பித்தார்.
- “என் தம்பி எம்.ஜி.ஆர்”
எம்.ஜி.சக்ரபாணி (ராணி இதழ் -1988)
Comments
Post a Comment