தாய்மைப் பண்பு கொண்ட ஜீவா
புரட்சி நடிகர் எம்.ஜி.ராமச்சந்திரன்
பொதுவாழ்வில் ஈடுபட்டு, தன் வாழ்க்கை முழுவதையும் அர்ப்பணித்து, தன் உள்ளத்தை ஈர்த்த ஒரு இலட்சியத்தை ஈடேற்று வதற்காக, ஆசாபாசங்கட்கு ஆட்படாமல், தன் சுகதுக்கங்களைக் கருதாமல், தன்னையே தியாகம் செய்து கொண்டு பணிபுரிவோர் எந்த நாட்டிலும், குறிப்பிட்டுக் காட்டக்கூடிய மிகச்சிலரே தோன்றுவார்கள்...
தமிழகம் பெற்ற அத்தகைய குறிப்பிடத்தக்க, பெரும் பணியாளர்களில், மறைந்த தோழர் ஜீவா அவர்கள் முன்னணியில் விளங்கியவர்களாவார்கள்.
இளஞர்களாயிருக்கும்போது, உணர்ச்சிகளுக்கு ஆட்பட்டு, நல்ல இலட்சியங்களால் ஈர்க்கப்பட்டு ஏற்படக்கூடிய நன்மை தீமைகளைக் கருதாது, அரசியல் சமுதாய இயக்கங்களில் ஈடுபடுவது தான் பொதுவாழ்க்கையின் ஆரம்பப்படிகள் என்றாலும், அந்த முயற்சியிலே நிலைத்து, பொதுப்பணி புரிவதையே, தனக்குரிய இன்பமாக்கிக்கொண்டு, தன்னை உருக்கிக்கொண்டு, ஒளி வழங்கும் "மெழுகுவர்த்தியாக" தன்னை ஆக்கிக்கொள்வோர் மிக மிகச்சிலரே ஆவர். சில ஆண்டுகள் சிறந்த தலைவராக விளங்குகிறவர்கள் பின்னால் ' எங்கே' என்று விலாசம் விசாரிக்க வேண்டிய நிலைக்கு வந்துவிடுகிற நிலைமைதான் பொதுவாழ்வில் அதிகம்.
தலைவராகத் தன்னைக் கருதாமலே தொண்டராகவே உழைத்து உழைத்து சந்தனக் கட்டையைப் போலத் தேய்ந்து தேய்ந்து உரு அழிந்தாலும் மற்றவர்கட்கு மணம் பரப்புவதைப்போல - தன் வாழ்க்கையை, இன்பத்தை, அழித்துக்கொண்டு அந்த தூயதன்மையால் ஏற்பட்ட சிறப்பை, மக்கள் சமுதாயத்திற்கு வழங்கி வந்தவர் ஜீவா அவர்கள்...
தாய்மைப் பண்பு பெண்களுக்குத்தான் பொது வாக உரியது என்றாலும், பொதுவாழ்க்கையில் ஈடுபட்டுப் பணிபுரியும் தலைவர்களும், தாய்மைப் பண்பு பெற்று விளங்குவது தான் அவர்களுக்குரிய தனிப்பெரும் சிறப்பாகும். தன் மகவிற்கு நோய் நொடிகள் வராமல் பாதுகாப்பதற்காக, தான் ' பத்தியம்' காத்து நா ருசிக்கு இரையாகாமல், ஆசைகட்கு அடிமையாகாமல், தியாக வாழ்வு வாழும் சிறந்த பண்புதானே, பெண்மையைச் சிறந்த தாய்மையாக்கி, தெய்வமாக உயர்த்துகிறது... அந்த தாய்த் தெய்வங்கட்குச் சமமாகத் தானே உண்மையான மக்கள் தலைவர்கள் விளங்குகிறார்கள்... இந்த நிலையை அடைய அவர்கள் எவ்வளவு பெரிய தியாக உள்ளத்தைப் பெற்று, அந்த உள்ளத்தைப் பேணி வளர்த்திட வேண்டியவர்க ளாகிறார்கள். அப்படிப்பட்ட தாய்மைப் பண்பு மிக்க தலைவர்கள் வரிசையில் ஜீவா அவர்கள் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கினார்கள்.
இளம் வயதில் - இன்ப நுகர்ச்சிகளுக்கு ஏற்ற வயதில் - வாழ்வின் வசந்தகாலமெனக் கூறப்படும் வாலிப வயதில்- ஜீவா பொதுவாழ்வில் ஈடுபட்டு, இயற்கைக்குத் தன்னை ஒப்படைக்கும் வரை, இரவு பகலாக--நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக பொது வாழ்வில் இருந்தார்-மாசு மருவற்று இருந்தார். மற்றவர்கட்கு எடுத்துக்காட்டாக இருந்தார்--- என்றால் சாதாரணமாக எல்லோராலும் செய்யக் கூடிய காரியமல்ல... ". செயற்கரிய செய்வர் பெரியார்' என்ற இலக்கியத்திற்கு இலக்கணம் வகுத்துக்காட்டும் வகையில் வாழ்ந்தார் ஜீவா .....
அவர் அகில உலகப் பொதுவுடமைத் தத்துவத் தின் காவலர் ஆனாலும், அகில இந்திய பொதுவுடமைக் கட்சியின் தலைவர்களில் ஒருவரானாலும், தமிழ் மக்களின் தொண்டர், தமிழ்மொழியின் தொண்டர், என்பதிலே பெரும் மகிழ்ச்சி கொண்டிருந்தார் என்பதை நான் அவரோடு பழகிய போதெல்லாம் அறிந்தேன் ........
உலகப் புகழ்பெறலாம், உலகத்திற்கு வழி காட்டியாக விளங்கலாம், உலகத் தலைவராகலாம் என்றாலும், தான் பிறந்த மண்ணிற்கு, தன்னை வளர்த்த மொழிக்குத் தொண்டு செய்வதிலே தான் தனிச்சிறப்புக் கிடைக்கிறது. பிற இனத்திற்கு, பிற மொழிக்கு வளர்ப்புத் தாயாக விளங்குவது, நற்பணிதான் என்றாலும், தாய்மொழிக்கு, தன் இனத்திற்கு சொந்தத் தாயாக இருப்பதுதானே தனிப்பெருஞ்சிறப்பு. அந்த அளவிலே, ஜீவா அவர்களோடு நான் பழகிய போதெல்லாம் அவரிடம், தமிழ் மொழிப்பற்றும், ஏன் - தமிழ் மொழியினிடத்திலே யாராலும் நீக்கமுடியாத பற்றும், தமிழ்நாட்டினிடத்திலே தாயன்பும் கொண்டிருந்தார் என்பதை நன்கு உணர்ந்தேன்...
எந்தப் பிரச்சினைகளையும் அவர் தமிழ் என்னும் உரைகல்லிலே உரைத்துப் பார்க்கும் பண்பு படைத்தவர்........
மாற்று கருத்துள்ளவர்களை, தன் கருத்துக்கு ஏற்ப மாற்றுவதற்கு, அவர் வாதம் செய்யும் பாங்கு மிகச் சிறந்ததாகும்……. ஆத்திரப்படாமல், விஷயங்களை விளக்குவதில் நிதானமும், நல்ல தெளிவும், தான் செய் துள்ள முடிவில் நல்ல நம்பிக்கையும் நிறைந்த அவருடைய சொற்பொழிவு மேடைப்பேச்சுக்கு ஒரு நல்ல இலக் கணமாகும். பொதுவுடமை இயக்கம் ஒரு பெருந் தலைவரை இழந்துவிட்டதாக எண்ணினாலும், தமிழ்நாட்டின் பாதுகாவலர்களில் ஒருவரை தமிழகம் இழந்துவிட்டது என்பதுதான் முழு உண்மையாகும்...ஜீவா வின் செயற்திறனும், சிறந்த பண்பும், சீரிய ஒழுக்கமும், தளராத முயற்சியும், ஈடுகாட்ட முடியாத தொண்டுள்ளமும், பொதுத்துறையில் ஈடு படுவோருக்கு ஒரு சிறந்த முன்மாதிரி யாகும்……
வாழ்க ஜீவாவின் புகழ்!
வளர்க அவர் உள்ளம் !!
மக்கள் திலகத்தின் , கருத்துகளைப் படிக்கும் பொழுது, ஜீவா என்கின்ற மாமனிதரின், மீது மதிப்பு, இமயமாக உயர்ந்து நிற்கின்றது ❤️
ReplyDelete